×

தமிழ்நாட்டில் ஏழாவது முறையும் திமுக ஆட்சிதான்: வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு தொடங்கியது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி உள்பட 47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1.50 லட்சம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கமும், 160 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி கூட்டத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் விஐபிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிவருகிறார்.

முதல்வர் உரையில்;
சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தரவுள்ள பாக முகவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திருவிடந்தையில் கிடைத்த மகிழ்ச்சியும் உற்சாகமும் திருப்பத்தூரில் இரட்டிப்பாகிறது. வாக்குச்சாவடி முகவர்களின் நம்பிக்கையை பார்க்கும்போதே திமுக ஆட்சிதான் என்பது உறுதியாகிறது. திமுகவுக்கு மக்களுக்குமான உறவுப் பாலமாக வெற்றியைத் தரவுள்ள வாக்குச் சாவடி முகவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

வடக்கு மண்டலத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். வடக்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக ஊடகத்தில் செய்தி வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இருந்ததைவிட தற்போது அதிக திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான்.

திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடக்கம். இதனை நான் ஆணவத்துடன் சொல்லவில்லை, திமுக அரசு செய்துள்ள சாதனைகளை நம்பி கூறுகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியையும் திமுகவின் கோட்டையாக காட்ட வேண்டும்.

2026ல் திமுகவின் வெற்றி என்பது பல ஆண்டுகளுக்கு ஆய்வாளர்கள் வியந்து பேசப்போகும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 75,000 வாக்குச் சாவடிகளிலும் 10 வாக்குச் சாவடி முகவர்களை நியமித்துள்ளோம். ஒவ்வொரு வாக்குச் சாவடி குழுவும் 100 வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியாக வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 வாக்குகளை பெற்று தந்தாலே 200 தொகுதிகளை வென்றுவிடுவோம். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்களுக்கான 100 வாக்காளர்களை 5 முறையாவது சந்திக்க வேண்டும். பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்து சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். சொன்னதையும் தாண்டி செய்துள்ளதால் மக்களிடம் கெத்தாக வந்து நிற்கிறோம். களத்தில் தொடர்ந்து உழைத்தால் கடந்த முறை பெற்ற வெற்றியை விட 100% வெற்றி சாத்தியம். 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. நமக்கு வாக்களிக்கும்வரை வாக்காளர்களை கனிவாக, நட்பாக அணுக வேண்டும்.

தேர்தல் நாளில் மின்னணு எந்திரங்களை சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். திமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். திமுக வென்றால்தான் தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மாணவர்கள், இளைஞர்களிடம் அவர்களுக்காக திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

 

Tags : DMK ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,polling station team training ,Tirupattur ,DMK North Zone Polling Station Team Training Conference ,Tamil Nadu ,President ,Mandalavadi ,Jolarpettai ,Vellore ,Ranipet ,Salem ,Krishnagiri… ,
× RELATED தமிழக அரசின் 2026-2027ம் ஆண்டுக்கான...