திண்டிவனம்: அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக் கட்ட சதி செய்கின்றனர். அவர்கள் (அன்புமணி தரப்பு) எதை எதையோ பேசுகின்றனர். ஒரு கூட்டம் பொய் சொல்வதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அரசியலில் அனுபவம் கொண்ட ஜிகே மணியை அவர்கள் வசைபாடுகின்றனர்.
தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எங்களுக்கும் தெரியாமல் அந்த பொய்யர்கள் கூட்டத்துக்கு சார்பாக ஒரு வழக்கை தேவையில்லாமல் போடுகிறது. கேவலமான அந்த செயலை தேர்தல் ஆணையமே செய்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் கூறியதாவது:
ஏ பார்ம், பி பார்ம் ராமதாஸ்தான் கொடுக்க முடியும் என்று தெரிந்த அன்புமணி தரப்பு பொய்யான ஆவணத்தை கொல்லைப்புறமாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் கபட நாடகம் ஆடினாலும், அன்புமணி தலைவர் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆனால் வெற்றி வெற்றி என மீடியா அரசியலை எதிர்தரப்பினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாமக சட்ட விதிகளின்படி
ராமதாஸ்தான் தலைவர். அக்கட்சியின் நிறுவனருக்குதான் கூட்டணி தொடர்பாக பேச முடியும். ஏ பார்ம், பி பார்மில் மற்ற கட்சிகளில் எல்லாம் தலைவர்கள் போடலாம். ஆனால் பாமகவில் நிறுவனர்தான் கையெழுத்திட முடியும். எனவே பாமக பெயரை உபயோகிக்க அன்புமணிக்கு உரிமையில்லை. முதலில் பல்டி அடித்த தேர்தல் ஆணையம் தற்போது சரியான நிலைக்கு வந்திருக்கிறது. நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிலைநிறுத்துவோம் என்றார்.
இதை தொடர்ந்து ராமதாஸ் அளித்த பேட்டி:
ஒருதலைபட்ச செயல்பாடாக இருப்பதாக கூறுகிறார்களே? இதன் பின்புலத்தில் பாஜக உள்ளதா..? தேர்தல் ஆணையம் சரியான திசையில் போகவில்லை. அது திரும்ப திரும்ப தவறு செய்துள்ளது. வேறு யாரையும் நான் குறைசொல்ல விரும்பவில்லை.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்து விட்டீர்களா?
கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதன் முடிவு விரைவில் வெளியாகும்.
சமூக வலைதளங்களில் அய்யா பாமக எனும் கட்சி உருவாகி இருப்பதாக கூறுகிறார்களே?
நான் அதை பார்க்கவே இல்லையே… இவ்வாறு அவர் கூறினார்.
