×

இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை மும்பையில் திறப்பு : ‘ஜெய் ஹோ’ பாடலை கேட்டு வாகன ஓட்டிகள் உற்சாக பயணம்!!

மும்பை : இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. பாடலை கேட்டு வாகன ஓட்டிகள் உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர். புதிய முயற்சியாக மராட்டிய மாநிலத்தின் மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலையில் மெல்லிசை சாலை அமைக்கப்பட்டு வந்தது. நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டு வந்த மெல்லிசை சாலையின் பணிகள் நிறைவடைந்த நிலையில், பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இசை சாலையை திறந்து வைத்தார்.

கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இசை சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது. மும்பையில் திறக்கப்பட்டுள்ள இந்த இசை சாலை உலகிலேயே 5-வது சாலையாக விளங்குகிறது. ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த புதுமையான சாலை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகு நரிமண் பாயிண்ட் வரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது ‘ஜெய் ஹோ” பாடலை வாகனத்தின் உள்ளே கேட்கலாம். சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பின் பட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த பட்டைகளை கடந்து செல்லும்போது வாகன டயர்களுக்கும். சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக ‘ஜெய் ஹோ’ என்ற இசை ஒலி உருவாகிறது.

Tags : India ,Mumbai ,Nariman Point ,Maharashtra ,Worli ,
× RELATED இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை...