×

ராதாபுரம், திசையன்விளை பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் திறக்க உத்தரவு முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு பாசன விவசாயிகள் பாராட்டு

ராதாபுரம், பிப். 4:  மணிமுத்தாறு அணையில் இருந்து ராதாபுரம், திசையன்விளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இதற்காக குரல் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு பாசன விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை தாலுக்காக்களை சேர்ந்த சுவிஷேசபுரம், புதுக்குளம், நந்தன்குளம், செங்குளம், முதலாளி குளம், குருவி சுட்டான்குளம், அப்புவிளை குளம், புத்தன்தருவை குளம், எருமைகுளம், இலங்குளம், கடகுளம் போன்ற 13 குளங்கள் மழை சரிவரப்பெய்யாததால் ஆண்டுதோறும் தண்ணீரின்றி வறண்டுக் கிடக்கின்றன.  பாசன விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து இக்குளங்களுக்கு கடந்த 1996, 2006, 2008 ஆண்டுகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சிறப்பு அனுமதி வழங்கி மணிமுத்தாறு 4வது ரீச்சில் தண்ணீர் திறந்து வறட்சி போக்கினார்.  

தற்போதும் சிறப்பு அனுமதி அளித்து தண்ணீர் திறந்துவிட முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, பாசன விவசாயிகளுடன் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்து  பரீசிலித்து  ஆவண செய்வதாக உறுதியளித்த தலைமைச் செயலாளர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்பாவு பொதுநல வழக்கு தொடர்ந்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினார். கடந்த ஜன.27ம்தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக பதிலளிக்க அரசுவுக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் நிலையில் நேற்று(3ம்தேதி) முதல் 28ம்தேதி வரை மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டது. இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு பாசன விவசாயிகளும், ராதாபுரம் தொகுதி மக்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : Irrigation farmers ,MLA ,Appa ,areas ,Thissayanvilai ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...