×

90 நாட்களுக்கு மேலாக திடக்கழிவுகளை தேக்கும் சாயப்பட்டறைகளுக்கு சீல்

பள்ளிபாளையம், பிப்.4: சாயப்பட்டறைகளில் 90 நாட்களுக்கு மேலாக திடக்கழிவுகளை தேக்கி வைத்திருந்தால், அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என மாசுகட்டுப்பாடு அதிகாரி எச்சரித்துள்ளார். பள்ளிபாளையத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள்  ஆலோசனை கூட்டம், சங்க தலைவர் கந்தசாமி,  நிர்வாகிகள் சண்முகம், தங்கமணி, பாலசுப்ரமணியம் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் குமாரபாளையம் சுற்றுச்சூழல் தலைமை பொறியாளர் செல்வகுமார் கலந்துகொண்டு,  சாயப்பட்டறைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசுகையில், ‘சாயப்பட்டறைகளில்  கழிவுநீரை சுத்தப்படுத்திய பிறகு, அதில் உள்ள இறுதி திடக்கழிவுகளை, உடனடியாக சிமெண்ட்  ஆலைக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஈரப்பதம் உள்ள கழிவுகளை சிமெண்ட்  ஆலைகளில் ஏற்பதில்லை.

எனவே சாயப்பட்டறைகளிலேயே கழிவுகளை நன்கு உலர வைத்து  மூட்டையாக கட்டி, சிமெண்ட் ஆலைக்கு அனுப்ப வேண்டும். 90 நாட்களுக்கும் மேலாக கழிவுகள்  தேக்கி வைக்க கூடாது. ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகள் மூடி சீல் வைக்கப்படும்,’ என்றார்.
கூட்டத்தில் குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் தீனதயாளன், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை