×

அமமுக நகர செயலாளர் வீட்டில் ₹ 5லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

நெல்லிக்குப்பம், பிப். 4:  நெல்லிக்குப்பத்தில் அமமுக நகர செயலாளர்  வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்த அபிபுல் ரகுமான்  மகன் அப்துல் ரஷிது (41). இவர் அமமுக நகர செயலாளராக உள்ளார். இவரது தம்பி முகமது சுலைமான் ஆலை ரோடு பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முகமது சுலைமானின் குடோனில் போலீசார் அதிரடி சோதனையிட்டதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் மூட்டைகளை பறிமுதல் செய்து முகமது சுலைமான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் அமமுக நகர செயலாளர் அப்துல் ரஷிது வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்துல் ரஷிது வீட்டில் அதிரடி சோதனையிட்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான அப்துல் ரஷிதை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : Amamuga ,house ,city secretary ,
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது