×

என் ஊர் என் கனவு திட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி கலந்தாய்வு கூட்டம்

*கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், என் ஊர் என் கனவு திட்டம், தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார்.

தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டினை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தி வருகிறார்.

‘‘என் ஊர் என் கனவு’’ என்ற திட்டமானது, 2030க்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும், மாவட்டத்தையும் இலக்கு வைத்து, வளர்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கும் தமிழக அரசின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.

ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. கூடுதலாக மாவட்ட வளர்ச்சிக்காக திட்டமிடுவதற்காக எதிர்கால தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்தி உள்ளார்கள்.

இந்த திட்டத்தின் செயல் வடிவம் கொண்டு வருவதற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்பதற்காக இந்த கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு தரப்பு பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தின் வாயிலாக, தர்மபுரி மாவட்டத்திற்கான தனித்தன்மையை கருத்தில்கொண்டு விரிவான, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 2030ம் ஆண்டிற்கான மாவட்ட தொலைநோக்கு செயல்திட்டம் வகுக்கப்படவுள்ளது.

“என் ஊர் என் கனவு திட்டம்’’ என்பது தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டம் ஊரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்த ஊரில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க வழிவகை செய்வதாகும்.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் தார்சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல், ஊர்களில் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளான குளம், ஏரிகளை தூர்வாருதல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொள்ளவும், நமது ஊர் முன்னேற நம் ஊரில் பிறந்து வளர்ந்த மக்களும் தங்கள் “கனவு ஊரை’’ உருவாக்க ஒரு வாய்ப்பாக இந்தத் திட்டம் விளங்குகிறது.

இது ஊர் மீதான பற்றை அதிகரிப்பதோடு, நவீன வசதிகள் கிராமங்களுக்கும் சென்றடையும் கருத்துகளில் இக்கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவரும், இங்கு வழங்கப்படும் அறிய கருத்துகளை எடுத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தங்களுடைய கருத்துகளை எங்களுக்கும் விண்ணப்பமாக எழுதி வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக தர்மபுரி மாவட்ட வளர்ச்சி பாதையை நோக்கி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் தயாரித்த குறும்படம் திரையிடப்பட்டுள்ளதை பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டனர்.

கூட்டத்தில் தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், டிஆர்ஓ கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கவிதா, மாவட்ட ஆட்சியர்(பணி ஓய்வு) அண்ணாமலை, திரைப்பட நடிகர் பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி) செளமியா குமார், மாநில விவசாய சங்க தலைவர் சின்னசாமி, அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனர்கள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Dharmapuri ,Dharmapuri District Collector ,Partnership ,Project ,District ,
× RELATED கலங்கரை விளக்கம் to திருமயிலை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!