×

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தாயகம் திரும்பிய மக்களுக்கு 500 வீடுகள் கட்ட நடவடிக்கை

மஞ்சூர், பிப்.4: பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்களுக்கு 500 வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் மறுவாழ்வு துறை சார்பில் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கான மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. மறுவாழ்வு துறை உதவி இயக்குனர்கள் பாஸ்கர், ராமதிலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெப்கோ வங்கி டெலிகேட் உறுப்பினர்கள் மதிவாகனம், அண்ணாதுரை, சந்திரமோகன், குமார், தம்பிராஜா, கிருஷ்ணன், யோகராஜ், சமூகஆர்வலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் கீழ்குந்தா பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு மனுக்கள்
அளித்தனர்.

இதை தொடர்ந்து மறுவாழ்வு துறை உதவி இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது: தாயகம் திரும்பிய மக்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை மறுவாழ்வு துறை மூலம் மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பியவர்களுக்கு கூடுதலாக 500 வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதி களை சேர்ந்த தாயகம் திரும்பிய மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

ஒரு வீட்டிற்கு ரூ.2லட்சத்து 10ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை 250க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். குடிசை மாற்று வாரியம் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் தவணை முறையில் பணம் செலுத்தி அதன் மூலம்் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பாஸ்கர் கூறினார். இதேபோல், பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத்திலும் மறு வாழ்வு துறை சார்பில் தாயகம் திரும்பிய மக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் ஊர் தலைவர்கள் ராமச்சந்திரன், தங்கவேல், மகேஸ்வரன், நடராஜ், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags : houses ,returnees ,areas ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...