×

அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 500 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த முதல்வர்: புத்தாடை, மங்கலப்பொருட்கள் வழங்கினார்

சென்னை: அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்கின்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மூத்த தம்பதியினருக்குச் சிறப்பு செய்தார். 2025-26ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மங்கலப் பொருட்கள் வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார். பின்னர் மாநிலம் முழுவதும் திருக்கோயில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக திருக்கோயில்கள் சார்பில் நேற்று சென்னை, வேப்பேரியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்புச் செய்தார். முதல்வர் மாலை எடுத்துக்கொடுக்க தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டார்கள். தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, இரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்கும சிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள், சுவாமி படம் உள்ளிட்டவை அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 2,000 மூத்த தம்பதியினருக்கு அந்தந்த மண்டலங்களில் சிறப்பு செய்யப்பட்டது. விழாவில் அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்கள், மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,Department of Endowments ,Chennai ,M.K. Stalin ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து