கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் 199 மையங்களில் நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம், 199 மேல்நிலைப் பள்ளிகளில், 19,355 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பயில்கின்றனர். இவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது.இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ளது. இன்று (10ம் தேதி) முதல் வரும் 13ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 328 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில், 257 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு துவங்கியது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், தணிக்கை அறிவியல், வேலைவாய்ப்பு திறன் உள்ளிட்ட 8 பிரிவுகளில் துவங்கிய செய்முறை தேர்வுகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர் என்றனர்.
