×

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 2ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

ஓசூர், பிப்.3:ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையில் இருந்து கடந்தாண்டு ஜூலை மாதம் முதல்போக பாசனத்திற்கு 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் ஓசூர் அருகே உள்ள காமன்தொட்டி, தொரப்பள்ளி, ராமாபுரம், பார்த்தகோட்டா ஆகிய பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இந்நிலையில், இரண்டாம் போக பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இரண்டாம் போக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் சூளகிரி அருகே உள்ள ஏரிகளுக்கு நிரப்பி வருகின்றனர். தண்ணீர் திறக்க தாமதம் ஏற்பட்டால் பருவநிலை மாறி மகசூல் பாதிக்கும். எனவே, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

Tags : dam ,Kelavarapalli ,
× RELATED தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு