×

தாஜ்மகால் ரோஜாவிற்கு மவுசு அதிகரிப்பால் நாள்தோறும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வைப்பு

*இணையவழி வர்த்தகத்தில் சாதனை

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் நல்ல மண் வளம் காணப்படுவதால், இப்பகுதியில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் இருந்து அதிகளவில் ரோஜா மலர்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால், ஓசூர் விவசாயிகள் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பசுமை குடில்கள் அமைத்து ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர். தாஜ்மகால்(சிவப்பு), நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக, காதலர் தின கொண்டாட்டத்திற்காக அதிகளவில் ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தாஜ்மகால், அவலாஞ்சி வகை ரோஜாக்களை அதிகளவில் சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அனுப்பி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பல்வேறு ரக மலர்கள் உற்பத்தி அதிகரிப்பால், ஓசூர் மலர்களுக்கு மவுசு குறைந்தது. மேலும், விமான கட்டணம் அதிகரிப்பாலும் ஏற்றுமதி சரிந்தது.

அதே வேளையில், இந்திய அளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுவதால், ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்தாண்டு காதலர் தினத்தையொட்டி, இணைய வழி வர்த்தகம் அதிகரிப்பால், ஆர்டரின் பேரில் ஓசூரிலிருந்து தினமும் 10 லட்சம் ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து ரோஜா உற்பத்தியாளர்களர்கள் கூறியதாவது: பசுமைக்குடில் அமைத்து பல்வேறு ரகங்களில் ரோஜா மலர்களை உற்பத்தி செய்து வருகிறோம். உரமிட்டு பராமரித்து மலர் உற்பத்தி செய்ய 45 முதல் 50 நாட்கள் வரை ஆகிறது.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை ஓசூர் பகுதியில் விளையும் ரோஜா பூக்கள் முழுக்க, முழுக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, கடும் போட்டியின் காரணமாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்ததால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

இந்தாண்டு காதலர் தினத்திற்கு வழக்கமாக உற்பத்தி செய்த ரோஜாக்களை, பிரபல கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைய வழியில் கொள்முதல் செய்கின்றனர். இதனால், தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ.150க்கு விற்பனையாகும்.

காதலர் தினத்தையொட்டி ரூ.300க்கு விற்பனையாகும் நிலையில், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. சீசன் இல்லாதபோது, தினமும் 2 லட்சம் மலர்கள் மட்டும் விற்பனைக்கு அனுப்பி இருந்தோம்.

தற்போது, தினமும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வைக்கிறோம். குறிப்பாக அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் தாஜ்மகால் ரகத்திற்கு அதிக ஆர்டர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரோஜா விவசாயத்தை பாதுகாக்க கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில், கொய்மலர் விவசாயம் செய்ய அரசு நிலங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மலர் உற்பத்தி செய்வதற்காக ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பசுமைக்குடில் அமைத்து ரோஜா உற்பத்தி செய்ய, விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 25 சதவீதம் மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.

இதனால், ஓசூர் பகுதியை விட கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் ரோஜா உற்பத்தி செய்கின்றனர். அதேபோல், ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு மானியம் வழங்கி, ரோஜா விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Krishnagiri District Ozur ,Tali ,Kelamangalam ,Parikai ,Bagalur ,
× RELATED தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல்...