சென்னை: நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதி திட்டத்தை அறிவித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது.
அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகர்வை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ஒன்றிய அரசு வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் குறைந்து கொண்டே போகிறது.
அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாக ரீதியாகவும் ஒன்றிய அரசின் நெருக்கடியை சமாளித்து திட்டங்களை அறிவிக்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான். வேர்வைத்துளி சிந்திய அரசு ஊழியர்களுக்கு ரத்தக்கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி. அரசு ஊழியர்களின் நலன், எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தோம்.
அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி கொச்சைப்படுத்தினார் உங்களுக்கு தெரியும். கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல் உங்கள் உழைப்புக்கான உரிமைத் தொகை என்று சொல்லப்படும். கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல் உங்கள் உழைப்புக்கான உரிமைத் தொகை என்று சொல்லப்படும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான மொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். திமுக அரசை பொறுத்தவரை சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்; நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பது அமைச்சரவையும், அரசு ஊழியர்களும்தான். நன்றி கூறி நமக்கான உறவை தூரமாக்கிட வேண்டாம். கலைஞரின் ஆட்சி என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்காக்கக் கூடிய பொற்காலமாக இருந்தது. மக்களுக்காக பணியாற்றக் கூடிய அரசு ஊழியர்களும் சேர்ந்ததுதான் அரசாங்கம்.
திராவிட மாடல் ஆட்சி, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான் அரசு ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். அரசு ஊழியர்களின் கண்ணீர்துளிகளை துடைக்கவே கோரிக்கையை நிறைவேற்றினோம். அரசு ஊழியர்களுக்கு நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான் கலைஞர் ஆட்சி. மக்களுக்காக உருவாக்கக் கூடிய திட்டங்களை கொண்டு சேர்க்கக் கூடியவர்கள் அரசு ஊழியர்கள்தான். ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு. ஆசிரியர்களால்தான் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
திராவிட மாடல் அரசுக்கு பெருமை கிடைத்திருக்கிறது என்றால் அதில் முழு உரிமை அரசு ஊழியர்களுக்குத்தான் உள்ளது. ஒன்றிய அரசுக்கு இணையாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி உள்ளோம். கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை திராவிட மாடல் அரசு வழங்கியது. அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட திருமண முன்பணம் ரூ.10,000லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி உள்ளோம். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி உள்ளோம். நிரந்தர பணியிடங்களில் சேர பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படுகிறது. எப்படிப்பட்ட சூழலில் ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என்பது அரசு ஊழியர்களுக்கு தெரியும்” எனவும் உரையாற்றினார்.
