×

வரும் 12ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடக்கும் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்: மமகவினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை: வரும் 12ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடக்கும் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திராள பங்கேற்க வேண்டும் என்று மமகவினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து, வரும் 12ம் தேதி நடத்த அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாடு விரோத போக்குகள், மாநில உரிமைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அணுகுமுறையின் தொடர்ச்சியாக ஒன்றிய பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம், தமிழ்நாட்டுக்கு உரிய வளர்ச்சி திட்டங்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் கட்டாயமாகும். ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு, தமிழ்நாட்டின் நலன், சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றை தொடர்ந்து அவமதித்து வருவது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

இதனை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது அவசியம். அதன் அடிப்படையில், வரும் 12ம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் இந்த போராட்டத்திற்கு வலு சேர்ப்பார்கள். தமிழ்நாட்டின் நலன் காக்கும் எந்த ஜனநாயக போராட்டத்திலும் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக களத்தில் நிற்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union government ,jawahirullah ,Chennai ,EU government ,Humanist People's Party ,M. H. ,Jawahirulla ,MLA ,Tamil Nadu ,
× RELATED கோயில் இடத்தில் வைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் அகற்றம்