×

குடியுரிமைக்கு முன்பே வாக்காளரான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சோனியாகாந்தி தரப்பு வாதம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கடந்த 1983ம் ஆண்டு இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். ஆனால் அவரது பெயர் டெல்லி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் 1980ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. இது குறித்து சோனியாகாந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரிபாதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து விகாஸ் திரிபாதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் சோனியாகாந்தி மற்றும் டெல்லி காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. சோனியா தரப்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரி கடந்த மாதம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நேற்று சோனியாகாந்தி தரப்பு வழக்கறிஞர்கள் தரன்னும் சீமா, கனிஷ்கா சிங் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தனர். இதில்,‘‘எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானவை. அற்பமானவை. அரசியல் உள்நோக்கம் கொண்டவை மற்றும் சட்ட செயல்முறையை தவறாக பயன்படுத்துவதாகும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது. 25 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட ஒரு சர்ச்சை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த புகாரில் எந்த அடிப்படை ஆவணங்களும் வழங்கப்படவில்லை. பதிலளிக்கும் மனுதாரரின் 1980ம் ஆண்டு விண்ணப்பம்/கோரிக்கை காரணமாகவே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எனினும் விண்ணப்பத்தின் தேதி, உறுதிமொழி விவரங்கள் அல்லது உள்ளடக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புகார் அளித்தவர் எந்தவொரு அத்தியாவசியமான உண்மைக்கூற்றுக்களையும் முன்வைக்காமல் கற்பனையான மற்றும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை கோருகின்றார்” என்றும் கூறப்பட்டு இருந்தது.  இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Sonia Gandhi ,New Delhi ,Congress party ,president ,Delhi Assembly ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10...