புதுடெல்லி: திருச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் வணிக ரீதியாக கடத்தல் பொருட்களை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்ட நிலையில் கடந்த 4ம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எம்.சீனிவாசன், ‘இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் 4ம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறார், அவருக்கு சட்ட உதவிகளை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது’ என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து 4ம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அந்த நபருக்கு பிணை வழங்கிய நீதிபதிகள், வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர் வசதி இல்லாத போது அவர்களுக்கு இலவச சட்ட உதவி பெறும் உரிமை குறித்து தெரிவிக்க வேண்டியது நீதிமன்றங்களின் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்தனர். மேலும் தகுதியானவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுவதை விசாரணை நீதிமன்றங்கள் கட்டாயம் தங்களது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பான தகவல்களை அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் அனுப்பி அதன் கீழ் இயங்கும் விசாரணை நீதிமன்றங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டனர்.
