×

2006ம் ஆண்டு முதல் தொடர் தோல்விகளை சந்திப்பதால் மேற்குவங்கத்தில் 19 ஆண்டுகால காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி முறிவு: திரிணாமுல், பாஜக அணிகளுக்கு மத்தியில் திடீர் திருப்பம்

 

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, 2016ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியை உருவாக்கிப் போட்டியிட்டாலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை வீழ்த்த முடியவில்லை.

மேலும், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்ததுடன், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் மால்டா மற்றும் முர்சிதாபாத் போன்ற காங்கிரசின் கோட்டை எனக் கருதப்பட்ட இடங்களிலேயே கட்சிக்குச் சரிவு ஏற்பட்டது. இந்தத் தோல்விகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இடதுசாரிகளுடனான கூட்டணியால் காங்கிரசின் வாக்கு சதவீதம் குறைந்ததே இந்தத் தனித்துப் போட்டி முடிவுக்கு மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 ஆண்டு காலக் கூட்டணி வரலாற்றை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. நேற்று இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ‘மேற்குவங்கத்தில் காங்கிரசின் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இனிமேல் வரும் தேர்தல்களில் கட்சி தனித்துப் போட்டியிடும்’ என்று கூறினார். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் மேற்கு வங்கத்தில் கட்சியின் வேர்களை மீண்டும் வலுப்படுத்தவும், 294 தொகுதிகளிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில் இடதுசாரிகளுடன் ‘இந்தியா’ கூட்டணியில் நீடித்தாலும், மாநிலத்தின் அரசியல் சூழல் அதற்கு மாறுபட்டு இருப்பதாகக் கட்சித் தொண்டர்கள் தலைமைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இடதுசாரிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுப்பதால் கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும், இனிமேல் சொந்த அடையாளத்துடன் களம் இறங்குவது மட்டுமே கட்சியைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இதன்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு மூன்றாவது சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக முயன்று வருகிறது.

காங்கிரஸின் இந்த அதிரடி முடிவை ‘மதச்சார்பற்ற சக்திகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்று இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளோ, காங்கிரசின் இந்த முடிவு வலுவிழந்து வரும் நிலையில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட கடைசி முயற்சியே என்று கிண்டல் செய்துள்ளன. அதேநேரம் பத்தொன்பது ஆண்டுகளாக நீடித்த உறவைத் துண்டித்துவிட்டுத் தனித்துப் போட்டியிடும் காங்கிரசின் இந்தத் துணிச்சலான முடிவு, மேற்கு வங்க மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Tags : Congress ,Left ,West ,Trinamool ,BJP ,KOLKATA ,CONGRESS PARTY ,WEST BENGAL ,
× RELATED இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை...