×

‘வெள்ளிமலை’ படத்தின் மூலம் நடிகை வின்சி நிவேதாவுடன் நெருக்கம்; சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நடிகை அஞ்சு கிருஷ்ணனுக்கு தொடர்பு: 5 நாட்கள் காவலில் எடுக்க முடிவு

* வடபழனியில் ‘மெத்’ விற்பனைக்கு என தனி வார்ரூம், செல்போன் விவரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்

சென்னை: சினிமா விஐபிக்களுக்கு நடிகை வின்சி நிவேதாவுடன் இணைந்து கேரள நடிகை அஞ்சு கிருஷ்ணன் போதைப்பொருள் விற்பனை மூலம் பல கோடிகளை சம்பாதித்துள்ளது விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனால் இருவரின் செல்போன் விவரங்களை ஆய்வு செய்த போது, சர்வதேச போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் ‘விடுதலை, டிராகன், யோலோ உள்ளிட்ட 15 சினிமா படங்களில் நடித்த நடிகை வின்சி நிவேதா (26) மற்றும் ‘வெள்ளிமலை’ திரைப்பட நடிகையான கேரளாவை சேர்ந்த அஞ்சு கிருஷ்ணன் (30) மற்றும் கேரளாவை சேர்ந்த விபின்ஷா (27), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (33), கோவூரை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31), கார்த்திக் ராஜா (31), காட்டுப்பாக்கதை சேர்ந்த யஷ்வந்த் (25), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன் (33) ஆகிய 8 பேரை சென்னை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தப்பெட்டமைன், 18 கிராம் கஞ்சா, 1 ஸ்டாம், 6 கிராம் ஓஜி வகை கஞ்சா, ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விக்னேஸ்வரன் மற்றும் விபின்ஷா, வெங்கடேஷ்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சினிமா பிரபலங்களுக்கு மெத்தப்பெட்டமின் மற்றும் ஓஜி வகை கஞ்சா விற்பனையை கேரள நடிகையான அஞ்சு கிருஷ்ணன் மற்றும் அவரது தோழியும் நடிகையுமான வின்சி நிவேதா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து 2 நடிகைகளிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. கைது செய்யப்பட்ட அஞ்சு கிருஷ்ணன், வின்சி நிவேதாவிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பழையனூர், கும்பலக்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவரது மகள் அஞ்சு கிருஷ்ணன் (30). இவர் கேரள சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னர் தமிழ் சினிமாவில் ‘வெள்ளிமலை’ என்ற திரைப்படத்தின் மூலாம் ஹீரோயினியாக அறிமுகமானார். அப்போது தான், விடுதலை, டிராகன், யோலோ படங்களில் நடித்த வின்சி நிவேதாயுடன் நடிகை அஞ்சு கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. வின்சி நிவேதா சில குறும்படங்களை இயக்கியுள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத இயக்குநர்கள் இல்லை. அதுவும் இவர் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் நெருங்கிய தொடர்பும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவமும் இருந்தது.

அதேநேரம் வின்சி நிவேதாவுக்கு மெத்தப்பெட்டமின் உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் பார்களில் போதை பொருள் உட்கொள்ளும் போது, வின்சி நிவேதாவுடன் நெருங்கிய பழக்கம் அஞ்சு கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. இந்த பழக்கத்தை வைத்து கேரள நடிகை அஞ்சு கிருஷ்ணன், போதை பழக்கம் உடைய தமிழ் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ய முடிவு செய்தார்.

வின்சி நிவேதா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை சாலமன் கிறிஸ்டோபர் தற்போதும், வடபழனியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். 2 தங்கைகள் படித்து வருகின்றனர். குடும்ப வறுமையை பயன்படுத்தி கொண்டு அஞ்சு கிருஷ்ணன், அவருக்கு தனது பண ஆசைக் காட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

ஏற்கனவே வின்சி நிவேதாவுக்கு போதை பழக்கம் இருப்பதால், அவருக்கு தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் போதை பழக்கம் உடையவர்கள் என்று நன்றாக தெரியும். இதனால் வின்சி நிவேதா உதவியுடன் தமிழ் சினிமாவில் மெத்தபெட்டமின், ஓஜி வகை கஞ்சா, சாதாரண கஞ்சாவை கேரள நடிகை அஞ்சு கிருஷ்ணன் விற்பனையை ரகசியமாக நடத்தி வந்தார்.

அஞ்சு கிருஷ்ணன் கேரள மாநிலத்தை சேர்ந்த போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அந்த கும்பல் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து, உயர் ரக மெத்தப்பெட்டமின், ஓஜி வகை கஞ்சாவை பெற்று அஞ்சு கிருஷ்ணனுக்கு கொடுத்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக அஞ்சு கிருஷ்ணன் தனது ஆண் நண்பரான கேரள மாநிலம் பலக்கோடு ஓட்டப்பாலம் எஸ்ஆர்கே. நகரை சேர்ந்த விபின்ஷா (27) உடன் இணைந்து கேரளாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள போதை பொருள் கும்பலிடம் அஞ்சு கிருஷ்ணன் ஆலோசனைப்படி, ஆண் நண்பர் விபின்ஷா மற்றும் நடிகை வின்சி நிவேதா ஆகியோர் சொகுசு காரில் சென்று போதை பொருள் வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். அப்படி கடத்தி வரும் போதை பொருள் பதுக்கி வைப்பதற்காக, வின்சி நிவேதா உதவியுடன் வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனை எதிரே உள்ள ‘லைன் எக்ஸ்’ என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து விற்பனை ெசய்து வந்துள்ளனர்.

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், ஒவ்ெவாரு வாரமும் யார் யாருக்கு போதை பொருள் கேட்டுள்ளனர் என்ற விவரங்களின் படி அவர்களுக்கு போதை பொருள் கொடுத்து வந்துள்ளனர்.  அதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு போதை பொருள் சினிமா பிரபலங்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு இல்லாமல், போதை பொருள் விற்பனைக்கு என தனியாக ஆலோசனை கூடம் சர்வீஸ் குடியிருப்பில் அமைத்துள்ளனர்.

அதற்கு அவர்கள், ‘வார் ரூம்’ என்று பெயர் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த வார் ரூமில், அஞ்சு கிருஷ்ணன் தலைமையில் ஒவ்வொரு வாரமும் ஆலோசனை நடக்கும். அந்த ஆலோசனையில் கேரளா, பெங்களூருவில் உள்ள போதை பொருள் கும்பல் நிர்வாகிகள் காணொலி காட்சி மூலம் பேசுவார்கள். அப்போது எவ்வளவு போதை பொருள் வேண்டும் என்பது நேரடியாக ஆர்டர்கள் பெறுவது உள்ளிட்ட விவரங்கள் நடந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வின்சி நிவேதா மற்றும் விபின்ஷா மட்டுமே கலந்துகொள்வார்கள்.

மற்றவர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டதால், சினிமா பிரபலங்கள் போதை பொருள் கிடைக்காமல் அலைந்துள்ளனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அஞ்சி கிருஷ்ணன் மற்றும் வின்சி நிவேதா ஆகியோர், இருமடங்கு விலைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலருக்கு ஆர்டர் பெயரில், மெத்தப்பெட்டமின் கொடுத்து உள்ளனர்.

அதற்கு ஆதாரமாக 2 பேரும் பயன்படுத்திய செல்போன் தகவல் மற்றும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் மூலம் உறுதியாகி உள்ளது. இதனால் இந்த 2 நடிகைகளிடம் இருந்து போதை பொருட்கள் வாங்கிய நடிகைகள் மற்றும் நடிகர்கள் குறித்து முழுமையான பட்டியலை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனியாக எடுத்து வருகின்றனர். அஞ்சு கிருஷ்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு கேரளாவில் இருந்து போதை பொருள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் போதை பொருள் விற்பனை கும்பலை முழுமையாக கைது செய்யும் பணியில் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கேரள நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் நடித்து கொண்டு சக சினிமா நடிகையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி போதை பொருள் விற்பனை செய்து வந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு போதை பொருள் சினிமா பிரபலங்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* போதை பொருள் எந்தெந்த நடிகைகள் மற்றும் சினிமா விஐபிக்கள் யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தும் வகையில் 5 நாள் காவலில் நடிகைகள் அஞ்சு கிருஷ்ணன், வின்சி நிவேதா மற்றும் ஆண் நண்பர் விபின்ஷாவை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் சினிமா துறையில் அவர்களிடம் யார் யார் போதை பொருள் வாங்கினார்கள் என்ற முழுமையான தகவல்கள் வெளியாகும் என் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Vinsi Niveda ,Anju Krishnan ,METH ,VADPALANI ,KERALA ,VINCI NIVEDA ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்தில்...