×

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 16ம் தேதி திறந்து வைக்கிறார், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் வரும் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் கட்டுமானப் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில் முதல்வரால் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான கட்டுமான பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ராஜிவ் காந்தி சாலையானது, மத்திய கைலாஷ் பகுதியில் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து துவங்குகிறது. இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடம் “T” வடிவிலானதாகும். இச்சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மிகுந்த சிரமத்துடனும் கால விரயத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இந்த சாலைச் சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்கு வாகனச் செறிவுகளின் அடிப்படையில், சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜிவ் காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் இம்மேம்பாலத்தினை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடையாறு பகுதியிலிருந்து, கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓஎம்ஆர் சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குத்தடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலைச் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சமிக்ஞையும் விலக்கிக் கொள்ளப்படும். மேலும், இருவழிச் சாலை மேம்பாலத்தினை செயல்படுத்துவதற்கு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.61 கோடி மதிப்பீட்டில் பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும் (அணுகு சாலை உள்பட). சர்தார் பட்டேல் சாலையிலிருந்து, ராஜிவ் காந்தி சாலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளைவானது 30 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமின்றி பயணிக்கலாம். இருப்பினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்திற்கு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்த “எல்” வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தின் பணிகள் முடிவுற்றுள்ளதால் வரும் 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளர் (மெட்ரோ) ஜவஹர், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Central Kailash ,Chief MLA ,K. Stalin ,Highways Minister A. ,Velu ,Chennai ,K. ,STALIN ,HIGHWAYS ,MINISTER ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...