*2 நாட்கள் நடைபெற்றது
தஞ்சாவூர் : மாநில அளவிலான ஒருங்கிணைந்த வேட்டையாடும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தஞ்சாவூர் வனக் கோட்டத்தில் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி அறிவுறுத்தலின் பேரில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. மாநில அளவிலான ஒருங்கிணைந்த வேட்டையாடும் பறவைகள் கணக்கெடுப்பு 2026 திட்டத்தின் ஒரு பகுதியாக, 31.1.2026 மற்றும் 1.2.2026 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் வனக் கோட்டத்தில் வேட்டையாடி பறவைகள் கணக்கெடுப்பு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம், வேட்டையாடி பறவைகளின் இன வளம், பரவல் நிலை மற்றும் மக்கள் தொகை நிலவரம் ஆகியவற்றை பல்வேறு வாழ்விடங்களில் பதிவுசெய்வதாகும். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை வனச் சரகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கணக்கெடுப்பில் விவசாய நிலப்பரப்புகள், ஈரநிலங்கள், ஆற்றுப்படுகைகள், கடலோர பகுதிகள், நகர்ப்புற சூழல்கள், குறுங்காடுகள் மற்றும் வனப்பகுதிகள் ஆகிய பல்வேறு வாழ்விடங்கள் உள்ளடக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு, முறையான மற்றும் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, பகல் மற்றும் இரவு நேரங்களில் காணப்படும் பல்வேறு வேட்டையாடி பறவைகள் பதிவாகின. அவற்றில் கரும்பருந்து, கருந்தோள் பறந்து, செம்பருந்து, விரால் அடிப்பான், ஆஸ்ப்ரே, இந்திய புள்ளிக்கழுகு, கொண்டை பாம்பு உன்னி கழுகு, தேன்பருந்து, சேற்று பூனை பருந்து, வைரி, புள்ளி ஆந்தை கூகை, பட்டை கழுத்து சின்ன ஆந்தை இவை அனைத்தும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உயிரியல் வளமும், வாழ்விட பல்வகைத் தன்மையும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக ஈரநிலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடலோர சூழல்கள் வேட்டையாடி பறவைகளின் உணவுத் தேடல் மற்றும் தங்குமிடங்களாக மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் இந்த கணக்கெடுப்பு உறுதி செய்துள்ளது. ஆய்வு முறைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி கூறுகையில்: பகல் நேரங்களில் வாகன ஆய்வு மற்றும் நடை ஆய்வு, இரவு நேரங்களில் ஆந்தைகளுக்கான புள்ளி கணக்கெடுப்பு இருப்பிட பதிவு, புகைப்பட ஆவணப்படுத்தல் போன்ற அறிவியல் முறைகள் பின்பற்றப்பட்டன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், 400க்கும் மேற்பட்ட வேட்டையாடி பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அலுவலர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வன உயிரியல் நிபுணர்கள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆய்வு தொடங்குவதற்கு முன், வேட்டையாடி பறவைகள் அடையாளம் காணுதல் மற்றும் கணக்கெடுப்பு நடைமுறைகள் குறித்த பயிற்சி மற்றும் வழிகாட்டல் அமர்வுகள் நடத்தப்பட்டு, தரவுகளின் துல்லியம் உறுதி செய்யப்பட்டது.வேட்டையாடி பறவைகள் உயிரியல் சங்கிலியின் உச்சியில் உள்ள வேட்டையா என்பதால், அவற்றின் இருப்பு ஒரு சூழலின் ஆரோக்கிய நிலை வெளிப்படுத்தும் முக்கியக் குறியீடாக கருதப்படுகிறது.
இத்தகைய கணக்கெடுப்புகள், மாநில அளவிலான ஆய்வுகள் நீண்டகால கண்காணிப்பு வாழ்விட பயன்பாட்டை புரிந்து கொள்வது, உயிரியல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவது ஆகியவற்றிற்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த வேட்டையாடி பறவைகள் கணக்கெடுப்பு, தமிழ்நாட்டில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை முயற்சிகளுக்கு ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
