×

சில்லிபாயிண்ட்…

* 24 வீரர்கள் பட்டியல் ஹாக்கி இந்தியா வெளியீடு
புதுடெல்லி: ஒடிசாவின் ரூர்கேலா நகரில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஆடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 33 பேர் கொண்ட பட்டியலை ஹாக்கி இந்தியா கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக, அவர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த 24 பேர் கொண்ட பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது. இவர்கள், எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் போட்டிகளில் இந்தியாவுடன், அர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

* ஓட்ட வீராங்கனை பூஜாவுக்கு தடை
புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை பூஜா ஆத்மாராம் (30), 5,000 மற்றும் 10,000 மீட்டர் தூரம் கொண்ட தொலைதூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் ராஜஸ்தான் சார்பாக பங்கேற்ற பூஜா 3ம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கும்படி, தடகள கட்டுப்பாட்டு அமைப்பு (ஏஐயு), பூஜாவிடம் கூறியிருந்தது. ஆனால், அந்த சோதனையில் அவர் பங்கேற்கவில்லை. அதையடுத்து, ஓட்டப் போட்டிகளில் பங்கேற்க, பூஜாவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஏஐயு அறிவித்துள்ளது.

* கால்பந்து பைனலில் கேரளா – சர்வீசஸ்
தகவுகானா: சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிகள் அசாமில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரயில்வேஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தகவுகானா ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கேரளா – பஞ்சாப் அணிகள் மோதின. துவக்கம் முதல் சூறாவளியாய் சுழன்றாடிய கேரளா அணி வீரர்கள் அடுத்தடுத்து 4 கோல்கள் போட்டு அசத்தினர். மாறாக, பஞ்சாப் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடிய கேரளா, சர்வீசஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

Tags : Hockey India ,New Delhi ,FIH Pro League ,Birsa Munda International Hockey Stadium ,Rourkela, Odisha… ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி:...