×

வாஷிங்டன் போஸ்ட்டில் 300 ஊழியர்கள் பணி நீக்கம்

 

வாஷிங்டன்: வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம், தனது ஊழியர்களில் 300க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம், தனது ஊழியர்களில் 3ல் 1 பங்கினரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து இந்த நிறுவனத்தில் நீக்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள். குறிப்பாக விளையாட்டு மற்றும் புத்தகங்கள் தொடர்பான செய்திகளை வழங்கும் பிரிவுகள் தற்போதைய நிலையில் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஒட்டுமொத்த செய்திக்குழுவும், உக்ரைனில் போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த செய்தியாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் அடங்குவார். இதற்கு காரணம் நிதி நெருக்கடி என சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க இந்த ‘நிர்வாக மறுசீரமைப்பு’ அவசியம் என்று அதன் நிர்வாக ஆசிரியர் மேட் முர்ரே தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய ஆண்டுகளில் இருந்த அரசியல் சூழல் மாறியதும், வாசகர்களின் வாசிப்பு பழக்கம் மாறியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை பத்திரிகை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது ஒரு கருப்பு நாள்” என பல மூத்த பத்திரிகையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வாஷிங்டன் போஸ்ட் கில்ட் அமைப்பும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : Washington Post ,Washington ,Amazon ,Jeff Bezos ,
× RELATED காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...