மூன்றாம் பாவத்தின் மகத்துவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீடு மாற்றம் மற்றும் பயணங்களை ஆராய மூன்றாம் பாவத்தை ஆராய வேண்டும்.
நான்காம் பாவம் என்பது ஓரிடத்தில் நிலையாக இருப்பது. அதற்கு 12ஆம் பாவமாக வருவது மூன்றாம் பாவம். அதனால் மூன்றாம் பாவம் ஓரிடத்தில் இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பது. சிறு தொலைவுப் பயணங்களைக் குறிப்பது மூன்றாம் பாவம்.
நண்பர் ஒருவருக்கு கன்னி லக்னம். மூன்றாம் இடத்துச் செவ்வாய் லக்னத்தில் அமர்ந்தார். அதாவது 3ம் இடத்துக்கு லாப ஸ்தானம் 11 என்பதால் வலுப் பெற்றார்.
இன்றுவரை அவர் சொந்த ஊரில் இல்லை. பல ஊர்களுக்கு மாறி இப்பொழுது ஒரு ஊரில் செட்டில் ஆகி இருக்கிறார். அவர் சொந்த ஊரில் வீடு வாங்க முயற்சித்தும் குடிபோக முடியவில்லை. மிகவும் முயற்சி செய்து ஒரு காலிமனை வாங்கினார். வாங்கி 15 வருடங்கள் ஆகிறது. வாங்கியது அப்படியேதான் இருக்கிறது. அதில் வீடு கட்டவோ குடியேறவோ முயற்சி செய்யவில்லை.
மூன்றாம் பாவம் எழுத்து சம்பந்தப்பட்ட பாவம் என்று சொல்வார்கள். டாக்குமெண்ட், கதைகளை எழுதுதல் இவைகளையெல்லாம் மூன்றாம் பாவம் குறிக்கும். மூன்றாம் பாவம் வலுப்பெற்று இருந்தால்தான் எழுத்தாளராக முடியும். அதோடு இரண்டாம் பாவம், பதினொன்றாம் பாவம் 10 ஆம் பாவம் இணைந்திருந்தால் அவர்கள் புகழ் பெறவும் எழுத்து மூலம் சம்பாதிக்கவும் முடியும்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர். மகர லக்னம். மூன்றுக்குரிய குரு பத்தாம் இடத்தில் இருக்கிறார். கேந்திர வலு. பத்துக்குரிய சுக்கிரன் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். சுக லாபாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து மூன்றாம் இடத்தைப் பார்க்கிறார்.
எழுத்துக்குரிய புதன் நான்காம் இடத்தில் சூரியனோடு அமர்ந்து செவ்வாயோடு பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். மூன்றாம் இடத்து குருவுக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தோடு ஐந்தாம் பார்வையால் தொடர்பு இருக்கிறது. இரண்டாம் இடத்தில் சனி ஆட்சி பெற்று இருக்கிறார். எனவே இரண்டாம் இடமும் வலுத்து இருக்கிறது. இத்தனைக் காரணிகளால் மூன்றாம் இடத்தின் சுபவலு கூடுகிறது. இவர் எழுத்துத் துறையில் மிகவும் புகழ் பெற்று நன்கு பணம் சம்பாதித்து இருக்கிறார்.
மூன்றாம் இடம் என்பது பல அதிசயங்களையும் ஆற்றல்களையும் பொக்கிஷமாகக் கொண்ட இடம். தைரிய ஸ்தானம், உத்தியோக ஸ்தானம், வீர்ய ஸ்தானம், சகோதர ஸ்தானம் என்று பற்பல விஷயங்கள் மூன்றாம் இடத்தில் உண்டு. மூன்றாம் இடம் என்பது காது, தோள்பட்டைகள், கைகள், கழுத்து எலும்பு, ரத்த நாளங்கள் முதலியவற்றையும் குறிக்கும்.
ஒரு உதாரண ஜாதகம் (அசல் ஜாதகம்). கும்ப லக்னம். மூன்றுக்குரிய செவ்வாய் மகரத்தில் உச்சம். எழுத்து வரும். ஆனால், மகர லக்கனம் என்பது கும்ப லக்கனத்துக்கு (ஜென்ம லக்னத்துக்கு) விரய ஸ்தானமாக வரும். எழுத்தை துணைத் தொழிலாகக் கொள்ள முடிகிறதே தவிர, பிரதானமாகக் கொள்ள முடியாது. காரணம் 12ஆம் இடம் (விரயம்) என்பதால் கூடுதல் தொழில் செய்து, ஓரளவு சம்பாதிக்கலாமே தவிர பிரதானத் தொழிலாகக் கொள்ள முடியாது .இப்போது துணைத் தொழிலாக கொண்டு சம்பாதித்து வருகின்றார்.
மூன்றாம் பாவம் என்பது எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தைக் குறிப்பது. நான்காம் பாவம் வீடு. மூன்றாம் பாவம் வீடு விற்பனையைக் குறிக்கும். மூன்றாம் பாவம் பலம் இழந்தால் சொத்து விற்பனையில் பிரச்னை வரும். மூன்றாம் பாவம் பலம் இழந்தவர்கள் ஒப்பந்தங்கள், பத்திரங்கள் எழுதுதல் போன்றவற்றில் மிகவும் ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டி இருக்கும் சிலருக்குப் பத்திரம் தொலைந்து விடும். அல்லது பத்திரத்தில் வில்லங்கங்கள் இருக்கும்.
என் நண்பர் ஒருவர் ஒப்பந்த ஷரத்துகளைப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு ஏமார்ந்து நிற்கிறார். காரணம் மூன்றாம் பாவம் அவருக்கு வலுவிழந்து விட்டது. மூன்றாம் பாவம் விரயத்தோடு தொடர்பு கொண்டு இருக்கிறது. இதுவே எட்டாம் பாவம், ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொண்டால் தவறான ஒப்பந்தங்கள் செய்து கொண்டு மாட்டிக் கொள்வார்கள். பிறகு கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும்.
மூன்றாம் பாவம், இரண்டாம் பாவம், ஆறாம் பாவம், பத்தாம் பாவம் இவைகள் ஒன்றுக்கொன்று இணைந்து, புதன் குருவோடு வலுப்பெற்று இருந்தால், ஐடி துறையில் கொடி கட்டிப் பறப்பார்கள். காரணம் மூன்றாம் பாவம் தகவல் தொடர்பு. ஆறாம் பாவம் வேலை. பத்தாம் பாவம் ஜீவனம். இரண்டாம் பாவம் வருமானம். குருவும் புதனும் தகவல் தொடர்பு மற்றும் அறிவு சார்ந்த விஷயத்திற்கு தொடர்பு பெற்றவர்கள்..
நான்காம் பாவம் என்பது சொந்த ஊர். மூன்றாம் பாவம் அதன் விரய பாவம் என்பதால் பெரும்பாலும் ஊர் விட்டு வேறு ஊரில் வசிப்பார்கள் என்று பார்த்தோம்.
ஊரிலேயே இருந்தாலும், பிறந்த வீட்டில் இல்லாமல் வேறு ஒரு தெருவில் வீடு வாங்கி குடியிருப்பார்கள். அது எத்தனை தூரம் என்பது மூன்றாம் பாவத்தின் பலம் மற்றும் பலவீனத்தைப் பொறுத்தது.
சிலர் பக்கத்து தெருவிலேயே இருப்பார்கள். சிலர் பக்கத்து ஊரில் இருப்பார்கள். சிலர் பக்கத்து மாநிலங்களில் இருப்பார்கள். சிலர் நாட்டை விட்டு வெகு தூரத்தில் இருப்பார்கள். ஒன்பதாம் இடம் சம்பந்தப்படுகிறதா? பன்னிரெண்டாம் இடம் சம்பந்தப்படுகிறதா? என்பதைப் பொறுத்து இந்த விஷயங்கள் மாறும்.
பன்னிரெண்டாம் பாவம் சம்பந்தப்பட்டால் அவர்கள் சொந்த ஊரை விட்டு விலகி வேறு ஊரிலேயே செட்டில் ஆகிவிடுவார்கள்.
மாமனாரையும் தந்தையின் சகோதர சகோதரி பிள்ளைகளையும் மூன்றாம் பாவம் குறிக்கிறது. பத்திரிக்கை, விளம்பரம், கையெழுத்து, அச்சகம், மனக்குழப்பம், புத்தி சுவாதீனம் போன்ற விஷயங் களையும் மூன்றாம் பாவம் சொல்லும். தைரிய வீரதீரச் செயல்களை மூன்றாம் பாவம் குறிக்கும்.
பிரஸ்ன ஜோதிடத்தில் ஒருவருடைய சந்திப்பு, பேட்டி, விவாதம், அது சுமுகமாகப் போகுமா, சிக்கலோடு முடியுமா என்பதை மூன்றாம் பாவம் சொல்லும்.
நாம் ஒரு செய்தியைக் கேள்விப்படுகிறோம். அது உண்மையா பொய்யா என்பதை மூன்றாம் பாவத்தின் தன்மையைக் கொண்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியும்.
கேள்விப்பட்ட நேரத்திற்கு ஒரு ராசிச் சக்கரம் போட்டு, மூன்றாம் வீட்டின் தன்மையை ஆராய்ந்தால் நாம் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். மூன்றாம் பாவ உப நட்சத்திரம் சனி சாரம் பெற்றால் கேள்வியில் உண்மை இருக்காது. குரு சாரம் பெற்று இருந்தால் கேள்வி உண்மையாக இருக்கும் ராகு சாரம் பெற்றால் சிறிய விஷயம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட விஷயமாக இருக்கும். மூன்றாம் பாவத்தில் இன்னும் பல சூட்சுமங்கள் உண்டு. மேலும் பார்க்கலாம்.
