×

மலையின் நிழல் விழும் அதிசயம்!

செய்யாற்றின் கரையொட்டிய அழகிய கிராமம் கரைப்பூண்டி. இங்கு, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும், பிடி சந்நியாசியான ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனமும், அவர் வாழ்ந்த வீடும் இருக்கிறது. இதை கேள்வியுற்ற நாம், நேராக கரைப்பூண்டிக்கு பயணித்தோம். அழகான பயணம். எங்களோடு நீங்களும் பயணியுங்கள்.

வெள்ளந்தியான மனிதர்

வேலூர் மாவட்டத்தில் இருந்து, போளூர் என்னும் ஊரையடைந்தோம். அங்கிருந்து ஆட்டோ மூலமாக, கரைப்பூண்டியை வந்தடைந்தோம். மதியம் சுமார் ஒன்று இருக்கும். ஊரே அமைதியாக காணப்பட்டது. ஒருவரிடம் கோயிலுக்கு வழிக்கேட்டு சென்றடைந்தோம். ஆட்டோவைவிட்டு கீழே இறங்கியதும், இதுதான் அனுமனின் கோயில் என்று நன்கு தெரிந்தது. காரணம், கோயிலை சுற்றிலும் வானரங்களின் கூட்டம். அந்த ஊரில் வசித்து வரும் மணி என்பவர், கோயிலை நமக்கு சுற்றிக் காட்டி, சில தகவல்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியதாவது;

“நாங்க இரண்டு தலைமுறையா.. இந்த கோயிலை சுத்தம் செய்து பராமரித்து வருகிறோம். என் அப்பா, கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வந்தார். இப்போ.. நான் சுத்தம் செய்து வருகிறேன். இதை அனுமனுக்கு ஒரு தொண்டாக செய்து வருகிறோம். வருமானத்திற்கு விவசாயம் செய்து வருகிறேன். அதுனாலத்தான் என்னவோ.. இன்னிக்கு என் புள்ள குட்டி நல்லா இருக்கு. என் பையன் வெளிநாட்டுல வேலை செய்யிறான். அதுக்கு காரணம் இந்த ஆஞ்சநேயருதானுங்க’’ என்று மனதில் பட்டத்தை வெள்ளந்தியாக கூறினார். பொதுவாக, கோயிலை பற்றி அர்ச்சகர்கள் அல்லது நிர்வாகிகள்தான் கூறுவார்கள். ஒரு சாதாரண மனிதர் கோயிலை பற்றி கூறுவது வியப்பாக இருந்தது. மேலும் அவர் பேசுகையில்;

“நான் பொறந்ததுலேந்து இந்த கோயிலை பார்த்து வருகிறேன். எனக்கு வேண்டலாம் தெரியாது. மனசு பாரமா இருந்தா இங்க வந்துடுவேன்’’ என்று கூறினார்.
“சார்.. இங்க சங்கர்ஷண ஒடையாருனு ஒரு மகானோட பிருந்தாவனம் இருக்குன்னு சொன்னாங்க.. எங்க இருக்குது?’’ என்று மணியிடம் கேட்டோம்.
“அது இங்க இல்லை.. தனியா ஆத்தங்கரை ஒட்டி இருக்கு. வாங்க கூட்டிட்டு போறேன்’’ என்று சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடம், அவர் வாழ்ந்த வீடு, தவம் செய்த இடம் என பொறுமையாக சுற்றிக் காட்டிய மணிக்கு, இந்த இடத்தில் நாம் நன்றியை சொல்லியே ஆகவேண்டும். அனுமன் கோயிலுக்குள்ளே சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். ஆனால், அனுமனின் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், செய்யாறு ஒட்டி சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் அமைந்திருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டோம். ஆக, அனுமனின் கோயில், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம், அவர் வாழ்ந்த வீடு, இது தவிர அனுமன் கோயில் அருகருகே விஷ்ணு – சிவன் ஆலயங்கள் என கரைப்பூண்டியே சாந்நித்யம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் அனுமன் கோயில்.

நாகர்கள் நிறைந்த கரைப்பூண்டி

முன்னொரு காலத்தில், கரைப்பூண்டியில் அக்ரஹாரம் பிரபலம். பல அந்தணர்கள் வாழ்ந்த இடம். அக்ரஹாரத்தில்தான் அனுமன் கோயில் கொண்டுள்ளார். காலப் போக்கில் அக்ரஹாரம், பிராமண தெரு என மருவியது. தற்போது, அந்தணர்கள் யாருமில்லை. ஆனால், கோயில் இன்றும் பழமை மாறாது அப்படியே காணப்படுகிறது. கோயில் உள்ளே சென்றதும், இடது பக்கத்தில் மிக பெரிய கல்தூண் இருக்கிறது. எந்த கோயில் கல்தூணிற்கும் இல்லாத சிறப்பு, இந்த கல்தூநிற்கு உண்டு. என்னவென்றால், தூணின் கீழ், நான்கு பகுதிகளிலும் சங்கு, சக்கரம், அனுமன், கருடன் என சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகளை எங்கும் காணமுடியாது. மேலும், கோயிலில் மொத்தம் மூன்று நாகர்கள் பிரதிஷ்டை யாகியிருக்கிறார்கள்.

இங்கு மட்டும் இல்லை. சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடம், அவர் வாழ்ந்த வீடு என அனைத்து இடங்களிலும் நாகர்களின் சிலைகள் காணப்படுகின்றன. நாகர்களுக்கும் இக்கோயில்களுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்பதனை புரிந்துக் கொண்டோம்.

நாகர்கள் அருகில், விஷ்ணுவின் சிலை ஒன்றும் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவைகளை கடந்து உள்ளே சென்றால், அனுமன் காட்சியளிக்கிறார். கோயிலை வலம் வந்தோமேயானால், அனுமனுக்கு நேர் எதிரில் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. மேலும் சில தகவல்களுக்காக கோயில் நிர்வாகியான ராகவேந்திரராவை கைபேசியில் தொடர்புக் கொண்டோம். அவர் கூறியதாவது;

சம்பத்கிரி மலையின் நிழல்

“இந்த அனுமாருக்கு “முக்ய பிராணன்’’ என்று பெயர். கோயிலுக்கு பின்புறத்தில், 750 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில், இந்த அரசமரத்தடியில்தான் அனுமன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். ஆக, இக்கோயில் அனுமன், சுமார் 750 ஆண்டிற்கும் மேலான அனுமன். கோயிலில் பெரிய கல்தூண் ஒன்று உள்ளது. விசேஷ நாட்களில், குறிப்பாக கார்த்திகை திருநாளில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்திருக்கிறது. காலப் போக்கில் அவைகளெல்லாம் நின்றுவிட்டன. மீண்டும் அத்தகைய மகிழ்ச்சியான தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறவேண்டும். அதற்கு, அனுமன் ஆசீர்வதிக்க வேண்டும். அதே போல், செய்யாற்றில் தீர்த்த வாரி என்று சொல்லக் கூடிய நிகழ்வு ஒன்று நடைபெறும்.

அதாவது, போளூர் சம்பத்கிரி மலையில் இருக்கக்கூடிய நரசிம்மஸ்வாமிக்கு, செய்யாற்றில் தீர்த்த வாரி வைபவம் நடைபெறும். அந்த சமயத்தில், செய்யாற்றின் வழியாக இக்கோயிலுக்கு நரசிம்மர் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதுவும் தற்போது நின்றுவிட்டது. இக்கோயில் அனுமன், வடக்கு நோக்கி அருள்கிறார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இங்கிருந்து வடக்கு திசையில்தான், சோளிங்கர் என்னும் இடத்தில் நரசிம்மர் இருக்கிறார். அவரை பார்த்தவாறு, அனுமன் பிரதிஷ்டையாகியுள்ளார்.

மேலும், சூரியன் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி நகரும் போது, போளூர் நரசிம்மர் வீற்றிருக்கும் சம்பத்கிரி மலையின் நிழல், கரைப்பூண்டி கிராமத்தின் மீது விழுகிறது. ஆகையால்தான், மகான் ஸ்ரீ வியாசராஜர் அனுமனை கரப்பூண்டியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மேலும், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர் இங்கு தங்கி சேவைகள் பல புரிந்து, பிருந்தாவனம் ஆனதாக கூறப்படுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். அன்றைய தினத்தில், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து, வேத பாராயணங்கள், புரந்தரதாசர் கீர்த்தனைகள் என அனுமன் ஜெயந்தியில் விழாக்கோலமாக இருக்கும் என கூறினார். அனுமனை நன்கு தரிசித்துவிட்டு, ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனத்தை காண ஆவலானோம்.

சிறிய பிருந்தாவனம்

செய்யாற்றின் மிக அருகிலேயே மகான் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. பின் ட்ராப் சைலன்ஸ் என்று சொல்லுவோமே.. அது போல், காற்றின் ஓசையை தவிர வேறு எதுவும் காதில் கேட்கவில்லை. நாம் சென்றிருந்த சமயத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை. ஓடியிருந்தால், இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும். பிருந்தாவனம் இருக்கும் இடத்தில் நுழைந்தவுடன், எலுமிச்சை மரமும், துளசி மாடமும் நம்மை வரவேற்கின்றன. பிருந்தாவனம் இருக்கும் நுழைவாயில், மிக சிறியதாகும். அனைவரும் குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்றவுடன், இடம் – வளம் என இருபுறத்திலும் நாகர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு அனுமனும் இருக்கிறார்.
அதன் பிறகு, மிக சிறிய அளவில், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் காணப்படுகிறது.

பிருந்தாவனம் மிக சிறியதாக காணப்பட்டாலும், அவரை கண்ட மாத்திரத்தில், இனம் புரியாத ஏதோ ஒரு பந்தம் ஏற்படுகிறது. பிருந்தாவனத்தின் மீது பெரிய நாகம் ஒன்றும் காட்சியளிக்கிறது. அதே போல், சங்கர்ஷண ஒடையரின் பிருந்தாவனத்தின் மீது விக்ரக அனுமாரும், அருகில் குழந்தை கிருஷ்ணரும் அருள்கிறார்கள்.

மர்மமான சிற்பம்

மிக முக்கியமாக, சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடத்திற்கு மேலே, சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிற்பத்தை பலரும் பல விதமாக கூறுகிறார்கள். சிலர், இதை நாகம் என்றும், சங்கர்ஷண ஒடையர் பிருந்தாவனம் ஆன பிறகு, சிற்பியே சங்கர்ஷண ஒடையரை போன்று வடிவமைத்திருக்கலாம் என்றும், இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது. மேலும், சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடமானது, அப்படியே பிருந்தாவன அமைப்பை போல் உருவாக்கியுள்ளார்கள். இங்கிருந்து பார்த்தாலே, சம்பத்கிரி மலை தென்படுகிறது. சங்கர்ஷண ஒடையரை பற்றி மேலும் பல தகவல்களை விவரிக்கிறார், நிர்வாகியான ராகவேந்திரராவ். அவர் கூறியது அப்படியே..

(அடுத்த இதழில்…)

Tags : Karaiotdiya ,Seayat ,Karaipundi ,Lord ,Sri Vyasarajar ,Shri Sankarshana Odyar ,
× RELATED கேள்விப்பட்ட செய்தி உண்மையா? பொய்யா?