×

பெரம்பலூர் கார்ப்பரேட் சலூன்களுக்கு அனுமதி வழங்க கூடாது

பெரம்பலூர், பிப். 4: பெரம்பலூரில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பாக நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன் கடைகளையும் அடைத்து, புது பஸ்டாண்ட் வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.

சங்கத்தின் மாநில இணைச் செயலாளர்கள் எசனை ராஜ்மோகன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் எஸ்.கே.ராஜா, ஆதி மருத்துவ சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மருத்துவர் சமூக மக்களுக்கு, உள் இட ஒதுக்கீடு வேண்டியும், நல வாரியத்தில் வழங்கப்படக்கூடிய உதவித் தொகைகளையும் ஓய்வூதியம் தொகைகளையும் உயர்த்தி தர வேண்டும்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் 6 மாதத்திற்கு ஒருமுறை முழு இலவச உடல் பரிசோதனை வழங்குவதோடு, இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க வேண்டும்.

பாரம்பரியமாக முடி திருத்தும் தொழில் ஒன்றையே நம்பி வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற வகையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் சலூன்களுக்கு அனுமதி வழங்க கூடாது போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Perambalur ,Tamil Nadu Medical Social Welfare Association ,Hairdressing Workers Welfare Association ,
× RELATED அண்ணா நினைவு நாள் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவினர் மரியாதை