×

புலம்பலுக்கு மனதை பழக்காதீர்கள்….

என்றென்றும் அன்புடன் 10

புலம்பல் நம் வார்த்தைகளை களவாடிக் கொள்கிறது. அநேகம் பேர் நண்பர்களிடம் புலம்புவதை பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய செல்போன் யுகத்தில் புலம்பல்கள் இன்னும் ஜாஸ்தியாகி இருக்கிறது.அது நட்பில் பெரும் விரிசலை உண்டாக்கும். அதிலும் சில இடங்களில் அது one side புலம்பலாக மாறும் ஆபத்து இருக்கிறது. இன்னொருவரின் கருத்தோ, அறிவுரைகளோ தேவைப்படுவதில்லை. எல்லோருக்கும் தேவை இன்னொரு காது புலம்புவதற்கு.

புலம்பல் என்ன செய்யும்?

இருக்கும் பிரச்னையை பேசப் பேச ஊதிப் பெருசாக்கும். மனம் புது எதிர் மறையான கற்பனைகளை உருவாக்கும். மெதுவாக மனம் கழிவிரக்கத்திற்குள் செல்லும்.மஹாபாரதத்தில் தர்மர் அனைத்தையும் இழக்கிறார். காட்டுக்கு செல்கிறார். தம்பிகளின் கோபத்திற்கும், மனைவியின் அதிருப்திக்கும் ஆளாகிறார்.

காட்டில் ரிஷிகளை சந்தித்து அவர்களை வணங்கி நிற்கும் பொழுது, தருமரை அவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். தருமரின் மூதாதையரான நள மகாராஜாவின் கதையையே விரிவாகச் சொல்கிறார்கள்.எல்லாருடைய வீழ்ச்சிக்குப் பின்னும், நேரம், காலம் என்பதைவிட, அவர்களிடமிருக்கும் கெட்ட பழக்கமே காரணமாக இருக்கும். நல்ல நேரம் இருக்கும் வரைக்கும், அந்த கெட்ட பழக்கம் துன்பத்தைத் தருவதில்லை. ஆனால், கெட்ட நேரம் வரும்போது, அந்த கெட்ட பழக்கமே வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.

அது மாதிரி, நளனுக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதுதான் சூதாடும் பழக்கம். மகாபாரதத்தில் எந்த சூதாட்டம் பாண்டவர்களைத் தெருவில் நிறுத்தியதோ, அதே சூதாட்டம்தான் இந்த நளனையும் தெருவில் நிறுத்தக் காத்திருந்தது.அதன்படி, நளனது அமைச்சரான புட்கரன் ஒருநாள் நளனை சூதாட அழைத்தான். சூழ்ச்சியின் மூலம், அந்த சூதாட்டத்தில் நளனைத் தோற்கடித்தான். நளனது நாட்டையும் ஆட்சியையும் பெற்றுக் கொண்டு, அவனைக் காட்டுக்கு வனவாசம் போகும்படி பணித்தான். நாடிழந்த நளன், வேறு வழியின்றி தனது நாட்டை விட்டு வெளியேறத் தயாரானான்.

இப்போது நளன் தனது குடும்பத்தோடு வனவாசம் மேற்கொள்ள வேண்டும். யாருடைய கண்ணிலும் படாமல் எங்கேயாவது போய் வாழ வேண்டும். இப்படி, தனது அடையாளத்தைத் தொலைத்து வாழும் சூழ்நிலையில், தமயந்தி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தாள்.

அவள் மட்டும் நளனைப் பின் தொடரலானாள்.இப்படி காட்டுக்குச் சென்ற நளனும் தமயந்தியும் அங்கு அரும்பாடு பட்டனர். இருவருக்கும் சரியான சாப்பாடு கிடையாது. தண்ணீர் கிடையாது. சோர்வு மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள் மயங்கியே விழுந்தாள் தமயந்தி. இதைப் பார்த்த நளன், அவளை அவனது தந்தையான வீமனின் நாட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினான். அவள் அதற்கு மறுப்பு தெரிவித்தாள். துன்பத்தில் அவனைப் பிரியேன் என்றாள்.

இதனால், வருத்தமுற்ற நளன் ஒருநாள் தமயந்தி நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, அவளை விட்டு நீங்கி தான் மட்டும் நடந்தான். தான் போய்விட்டால், காட்டில் தமயந்தி தனியாகக் கஷ்டப்படாமல், அவளது தந்தை வீட்டுக்கே சென்று விடுவாள் என்ற எண்ணம்தான். அவளும் நளனை காணாமல் தந்தையின் வீட்டிற்குச் சென்றாள்.

நளன் , பல சோதனைகளை கடந்து, விதர்ப்ப நாட்டின் அரசனிடம் தேரோட்டியாகச் சேர்ந்தான். கார்க்கோடகன் என்கிற பாம்பு தீண்டியதால் அவன் நிறம் மாறி இருந்தது. பின்பு, தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளை மணம் செய்து கொண்டான். சனியின் பிடியில் இருந்து விடுபட்டு தமயந்தியுடன் சேர்ந்தான். எந்த சோதனைகளிலும் மனம் தளரவில்லை.நீங்காத புகழ் பெற்றான்.

இது போன்ற கதைகள் தருமருக்கு பெரும் தெம்பை கொடுத்தது. நம்பிக்கை துளிர்த்தது. சோதனைகளை கடந்து வெற்றி பெற்றார்.சோதனைகளையோ, கஷ்டங்களையோ தவிர்க்க முடியாது. அதை கடக்கும் வழிமுறைகளை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.மறுநாள் பட்டாபிஷேகம் என்ற நிலையில் ராமர் காட்டிற்கு அனுப்பப்பட்டார். அவர் சிறிதும் தடுமாறாமல் அதை எதிர் கொண்டார். விஸ்வாமித்திரர் அவருக்கு பயிற்று வித்ததை நினைவு படுத்தி கொள்வதற்கும், அரசனாக பதவி ஏற்பதை விட மக்களையும், பரந்த தேசத்தையும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டார்.

ஆரண்யத்தில் பல ஞானிகளையும், ரிஷிகளையும் சந்தித்தார். பக்குவப்பட்டார். எந்த ஒரு இடத்திலும் புலம்பவில்லை. கோபப்படவில்லை.புலம்பல் நம் வளர்ச்சியை தடுக்கும். புதிய சிந்தனைகளை உருவாக்காது. புலம்பல் நமக்குள் ஒரு நிரந்தர வலியை ஏற்படுத்தும். அதுவே நோயாக உடம்பில் பரவும்.புலம்பியே பழகியவர்கள், ஒரு காகிதத்தில் சொல்ல வேண்டியதை, எழுதி … கிழித்துப் போடலாம். வாய்ஸ் ரெகார்ட் செய்து டெலீட் பண்ணிவிடலாம். பிறரிடம் சொல்லுவது நம்மை அழிக்கும். பிறரை நம்மை விட்டு விலகச்செய்யும் .புலம்பலை தவிர்த்து பெரிய செயல்களை நோக்கி செல்வதும், பெரும் ஆளுமைகளின் வார்த்தைகளை பின் பற்றுவதும், நல்ல படியாக வழிநடந்தும்.

ரம்யா வாசுதேவன்

Tags :
× RELATED அகத்தினுள் அனுபவப்பட வேண்டும்!