- விசரஜர்
- அனுமன்
- விஜயா கோதந்தராமர்
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- சீதா
- லக்ஷ்மண
- சம்பதி
- அனுமன் சமீதா விஜய கோடந்தராமர் கோயில்
- அஞ்சநேயன்
- ரேம்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டத்தின் நடுவில் இருக்கும் ஊர், செய்யார். இங்கு, “ சீதா, லட்சுமண, சம்பாதி, அனுமன் சமேத விஜய கோதண்டராமர் கோயில்’’ உள்ளது. இந்த கோயிலுக்குள், “ வீர ஆஞ்சநேயரும்’’ அருள்கிறார். அவரை பற்றியும், ராமரை பற்றியும் பார்ப்போம்.
ராமாயண காலத்தின் குளம்
செய்யார் பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், “சம்பத்தியான் குளம்’’ என்னும் இடத்தில், “ விஜய கோதண்டராமர்’’ கோயில் கொண்டுள்ளார். இங்குதான், மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் அருள்பாலிக்கிறார். செய்யார் சிறிய ஊராக காணப்பட்டாலும், தற்போது கல்வி கற்க பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ வசதிகள் என முன்னேற்றும் பாதையில் திகழ்கிறது. அதற்கு காரணம், “ விஜய கோதண்டராமர்’’ கோயில்தான் என்று ஆன்மிக அருளாளர்கள் தெரிவிக்கிறார்கள். ராமர் வசிக்கும் இடமான சம்பத்தியான் குளம், ஒரு காலத்தில் அதாவது ராமாயண காலத்தில் பிரசித்தி பெற்றவையாகும். இதனை அறிந்துதான், மகான் வியாசராஜர் சம்பத்தியான் குளம் அருகிலேயே அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று ஆன்மிகவாதிகள் தெரிவிக்கிறார்கள். மேலும், ராமாயண காலத்தில் மிக பெரிய குளமாக திகழ்ந்த சம்பத்தியான் குளம், காலம் போக்கில் கட்டிடங்களாக மாறியது. அதன் தொடர்ச்சியாக, சம்பத்தியான் குளம் என்னும் பெயர்,
“சம்பத்தியான் தெரு’’ என மாறியது.
மனம் கமழும் மலர்கள்
தற்போது, சம்பத்தியான் தெரு முழுவதும் வீடுகள்தான் நிறைந்து இருக்கின்றன. குளம் எங்கே உள்ளது என்றே தெரியவில்லை! இத்தகைய கட்டிடங்களுக்கு மத்தியில், அமைதியான சூழலில், “ விஜய கோதண்டராமர் கோயில்’’ உள்ளது. இவரை காண 50 மீட்டர் தூரத்தில் ஒரு ஒத்தையடி பாதையை கடக்க வேண்டும். ஒத்தையடி பாதை இருபுறத்திலும் பாரிஜாதம், துளசி என தெய்வீக மனம் கமழும் மலர்களும், செடிகளும் காணப்படுகின்றன. 500-800 ஆண்டுகள் முந்திய கோயில் என்று கூறப்பட்டாலும், இதற்கு போதிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்படவில்லை. அதே போல், 1917-ஆம் ஆண்டில், கந்தாடை சம்பாதி நரசிம்மாச்சாரியார் என்பவரால், ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கு மட்டுமே ஆதாரம் உள்ளது. ஆக, ஆதாரப்படி பார்த்தோமேயானால், இக்கோயில் சுமார் 108 ஆண்டுகள் பழமையானது. மேலும், கோபுரத்தை பார்த்தாலே நன்கு தெரிகிறது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்ததுதான் என்று!சில ஆண்டுகளுக்கு முன்பு, மிக சிறிய கோயிலாகத்தான் இருந்திருக்கிறது. அதாவது சிறிய சந்நதியும் அதன் மீது மூன்று கலசங்கள் கொண்ட கோபுரமும் மட்டுமே இருந்திருக்கிறது. அதன்பின் 2007-ஆம் ஆண்டில்தான், இக்கோயிலின் முன்மண்டபம் கட்டப்பட்டு, விரிவு செய்யப்பட்டிருக்கிறது.
கருடனின் தம்பி
கோயில் உள்ளே சென்றதும், விஜய கோதண்டராமர், சீதா – லட்சுமணரோடு மிக அழகாக காட்சியளிக்கிறார். மூலவரான விஜய கோதண்டராமருக்கு முன்பாக, உற்சவர் அனுமாரோடு ராமர் – சீதா – லட்சுமணர் ஆகிய உற்சவர்களும் சேவை சாதிக்கிறார்கள். இவர்களுக்கு அருகில், “விஷ்ணுசக்ரம்’’ ஒன்றும் உள்ளது. இதன் முன்பாக, சிறிய வடிவிலான “ லட்சுமி ஹயக்கிரீவர்’’, “ லட்சுமி நரசிம்மர்’’, “ வராஹர்’’ ஆகிய உற்சவர்களும் காட்சியளிக்கிறார்கள். அது மட்டுமா! மூலவரான விஜய கோதண்டராமர் அருகில், கருடனின் தம்பியான “அருணன்’’ இருக்கிறார். கருடன் மற்றும் அருணன் ஆகிய இருவரும், வினதை மற்றும் காச்யபரின் புதல்வர்கள் ஆவார்கள். அருணன், சூரியனின் ரதசாரதி அதாவது தேரோட்டியாக இருந்தவர் எனப் புராணங்கள் கூறுகின்றன.
இவர்களை எல்லாம் மனம் குளிர சேவித்துவிட்டு, மங்களாரத்தி, தீர்த்தம், சடாரி ஆகியவைகளைப் பெற்றுக் கொண்டு, வெளியே வந்தால், “ ராமானுஜர்’’, “ நம்மாழ்வார்’’, “ ஸ்வாமி தேசிகன்’’ ஆகியோர் ஒரே சந்நதியில் இருந்து அருள்கிறார்கள். சேவித்துவிட்டு வெளியே பிரதட்சணமாக வந்தால், கோபுரத்தில் உள்ள தெய்வீக சிற்பங்களை ரசிக்கலாம். கோபுரத்தின் ஒரு இடத்தில், ருக்மிணி – சத்யபாமாவுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் நம்மை மயக்குகிறான்.அதே போல், ஒரு இடத்தில் பள்ளிக் கொண்ட பெருமாள் தத்துரூபமாக காட்சியளிக்கிறார். கோபுரத்தின் கீழே ஒருபுறத்தில் “ லட்சுமி ஹயக்கிரீவரும்’’, மறுபுறத்தில் “ லட்சுமி நாராயணரும்’’ கண்ணாடி
அறையில் இருக்கிறார்கள்.
சிறிய நுழைவாயிலில் அனுமன்
அப்படியே கோயிலை வலம்வந்தோமேயானால், நாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும், நம் “வீர ஆஞ்சநேயரின்’’ சந்நதியை காணலாம். சந்நதி என்று சொல்வதைவிட, தனி கோயில் என்றே சொல்லலாம். காரணம், அனுமனின் சந்நதிக் கென்றே தனி கோபுரமே அமைத்திருக்கிறார்கள். சந்நதியின் முகப்பு ஆர்ச்சில், கம்பீரமாக ஆஞ்சநேயரின் சிலை காணப்படுகிறது. வீர ஆஞ்சநேயஸ்வாமியின் சந்நதி நுழைவாயில், மிக சிறியதாக காணப்படுகிறது. உடலை, கால் பகுதி வரை குனிந்துதான் சந்நதிக்குள் செல்ல முடியும். ஆகையால், அர்ச்சகரை தவிர அனுமனின் சந்நதிக்குள் யாரும் செல்ல மாட்டார்கள். வீர ஆஞ்சநேயரை கண்ட உடனே நம் மனமானது இனம் புரியாத பூரிப்படைந்தது. இருக்காதா பின்னே.. மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் ஆயிற்றே!அனுமனின் முன்பாக பலிபீடம் இருக்கிறது. சந்நதிக்கு நேராக இன்னொரு பலிபீடமும், விளக்கேற்றும் தீபத்தூனும் காட்சியளிக்கிறது. எப்போதும் போல், இந்த அனுமனிடத்திலும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. அதாவது, தலைக்கு மேலே வாலும், அதன் மீது சிறிய மணியும் உள்ளது. சற்று நேரம் அனுமனின் சந்நதி முன்பாக அமர்ந்து நன்கு தரிசித்தோம்.
அதன் பிறகு, கோயிலுக்கு தினமும் வரும் பக்தரான கார்த்திகேயன் கூறியதாவது; “நான் சிறுவயது முதல் இக்கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறேன். மார்கழி மாதத்தில் கோயிலில் ஒலிக்கின்ற பக்திப் பாடலை கேட்டுத்தான், என் காலை பொழுதே விடியும். அலாரமே தேவையில்லை. எழுந்து பள்ளிப் பாடங்களை எல்லாம் படித்து முடித்த பின்னர், குளித்துவிட்டு நேராக ராமர் கோயிலுக்கு வந்துவிடுவேன். ராமரையும் அனுமாரையும் சேவித்த பின்னர், பிரசாதமாக வெண்பொங்கல் கொடுப்பார்கள். நெய் சொட்ட சொட்ட… தித்திப்பாக இருக்கும். அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்லும் காலம் பொற்காலம். நான் என்ன வேண்டிக் கொண்டாலும், அனுமன் உடனே நிறைவேற்றிவிடுவார்’’ என்று சிலாகித்து சொல்லி முடித்தார். நாமும் அனுமனை நன்கு வேண்டிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்!
விழாக்கள்: ராம நவமி, அனுமன் ஜெயந்தி.
கோயில் திறந்திருக்கும் நேரம்: பிற்பகல்: 12.00 முதல் 1.00 வரை மட்டுமே.
எப்படி செல்வது: காஞ்சிபுரத்தில் இருந்து செய்யார் பேருந்து நிலையம் 30 கி.மீ., தூரமாகும். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. அதே போல், திருவண்ணாமலையில் இருந்தும் பயணிக்கலாம். கோயில் தொடர்புக்கு: 9840483337
