திருத்தணி: கோடை தொடங்க உள்ள நிலையில், குளிர்ச்சி நிறைந்த தர்பூசணி அதிக அளவில் மகசூலுக்கு வந்துள்ளதால், திருத்தணி பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுகிய கால பயிரான தர்பூசணி குளிர்ச்சி நிறைந்த பழம் என்பதால், குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆர்வத்துடன் ருசித்து சுவைக்கின்றனர். மார்ச் முதல் வாரத்தில் இருந்து கோடை தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடியில் தீவிரம் காட்டுகின்றனர். ஜனவரி முதல் மார்ச் மாதம் தர்பூசணி சாகுபடிக்கு உகந்த பட்டம் என்பதால் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது.
திருவாலங்காடு ஒன்றியத்தில் கொல்லகுப்பம், பூனிமாங்காடு அருகே வெங்கடாபுரம், ஆற்காடு குப்பம், கனகம்மாசத்திரம் ஆகிய பகுதியில் விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்து மகசூலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்;
தோட்டக்கலை துறை நிதி உதவியுடன் மானியம் பெற்று சொட்டு நீர் பாசன முறையில் தர்பூசணி சாகுபடி செய்து வருகிறோம். டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஏக்கர் ஒன்றுக்கு அரை கிலோ விதைகள் குழிக்கு 6 விதைகள் வீதம் நடவு செய்து, ஐந்து நாட்களில் விதைகள் முளைத்து விடும், விதைப்பு தன்மை காலத்தில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பின்னர் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் செடிகளுக்கு பாய்ச்சினால் கொடிகள் வேகமாக வளரும். கொடிகளுக்கு பூச்சிகள் தாக்குதல் கட்டுப்படுத்த இயற்கை உரங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி பூஸ்டர் திரவங்கள் தெளித்தால் தர்பூசணி மகசூல் அதிகரிக்கும். சாகுபடி தொடங்கிய நாளில் இருந்து 60 லிருந்து 70 நாட்களில் முழுமையாக மகசூல் செய்ய முடியும். தற்போது காய்கள் நன்கு வளர்ந்து பக்குவத்திற்கு வந்துள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்து விற்பனை செய்ய உள்ளோம்.
கிலோ 20க்கு விற்பனை
ஜனவரி தொடக்கத்தில் இருந்தே சாலையோரங்களில் தர்பூசணி கடைகள் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விளை நிலங்களுக்கு வந்து பக்குவத்திற்கு வந்த தர்பூசணி அறுவடை செய்து கிலோ ரூ.20க்கு வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு தர்பூசணி மகசூல் அதிகரித்துள்ளதால் வருவாய் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
