×

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜ அரசுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜ அரசுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி எச்சரித்துள்ளார். தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜ அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜவிற்கு சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜ கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்டகால கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனை செயல்படுத்த மறுக்கிறார். விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாக தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?

பட்ஜெட்டால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச்சந்தையே பறைசாற்றிவிட்டது. தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கை விடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9வது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி. அதிமுகவோ பாஜவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல, இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜ அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bajaj government ,Tamil Nadu ,Minister ,Ragupati ,CHENNAI ,BAJA ,Minister of Natural Resources ,Union ,
× RELATED தவெகவில் இணைப்பா? ஓபிஎஸ் டென்ஷன்