×

நெடுஞ்சாலைத்துறையில் இ டெண்டர்கள் ரத்து

கோவை, பிப்.2: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் இ டெண்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கண்காணிப்பு பொறியாளரின் விதிமுறை மீறல் தொடர்பாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரோடு, பாலம் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக திட்ட பணிகளுக்கான டெண்டரில் விதிமுறை மீறல் நடப்பதாக புகார் எழுந்தது. தஞ்சாவூரில் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பிபிஎம்சி டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டெண்டர் நிறுத்தப்பட்டது. 495 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றொரு டெண்டரும் நிர்வாக காரணம் என குறிப்பிட்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அளவில் நெடுஞ்சாலைத்துறையில், இந்த மாதம் 300க்கும் மேற்பட்ட திட்ட பணிகளுக்கு இ டெண்டர் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் விதிமுறை மீறல் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததை தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் டெண்டர்கள் எதுவும் வெளியிடப்படாமல் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

திருச்சி கண்காணிப்பு பொறியாளர் பழனி என்பவர் டெண்டர் விதிமுறைகளை மதிக்கவில்லை. அவரின் தன்னிச்சையான முறைகேடான செயல்பாட்டினால்தான் மாநில அளவில் நெடுஞ்சாலை டெண்டர்கள் முடங்கி கிடப்பதாக நெடுஞ்சாலை ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் எடுத்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டார், சில திட்ட பணிகளுக்கு அவர் முறைகேடாக ஒப்புதல் கொடுத்து விட்டார் என கண்காணிப்பு பொறியாளர் மீது அறப்போர் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவித்துள்ளனர். பணி ஓய்வு பெற்ற இவர், கொரோனா நோய் காலத்தை பயன்படுத்தி மேலும் ஒரு ஆண்டு காலம் பணி நீட்டிப்பு பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

திருச்சி கண்காணிப்பு பொறியாளரின் முறைகேட்டை தொடர்ந்து சேலம், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்படவில்லை. தேர்தல் நேரத்தில் பணிகள் நடத்தாமல் முடக்கிவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்.  விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இ டெண்டர் நடத்தப்படவேண்டும். ரோடு, பாலம் பராமரிப்பு பணிகளை விரைவாக நடத்தவேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் புதிய திட்ட பணிகளை துவக்க முடியாது. எனவே பராமரிப்பு பணிக்கான டெண்டர்களை கால தாமதமின்றி நடத்த வேண்டும் என  ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : e-tenders ,
× RELATED ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை:...