×

ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை: வீட்டில் இருந்தே ஆன்லைனில் இ-டெண்டர் கேட்கலாம்: ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேச்சு

ஈரோடு: வீட்டில் இருந்தே ஆன்லைனில் டெண்டர் கோரலாம் என்பதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஈரோடு  மாவட்டத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரத்தை பவானியில் அதிமுக துணை  ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி  பேசியதாவது: பவானி வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தொகுதியாகும். வேளாண் தொழிலுக்கு  நீர்த்தேவை அவசியமாகும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் பவானி தொகுதியில்  ஏராளமான ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது.  

இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.  நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக விளங்கி  வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறுவரை பவானி ஆற்றின்  குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர்  மேற்கு, கிழக்கு கரை வாய்க்கால்களில் தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்காக  2 கரைகளும் காங்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் பாசனம் பெறும் கீழ்பவானி வாய்க்காலில் 940 கோடியில்காங்கிரீட் கரைகள் அமைக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. தமிழக அரசின்  திட்டப்பணிகளுக்கு வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் டெண்டர் கோரலாம். இதனால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தமிழகத்தில் ஏழைகளுக்கு அவரவர்  வாழ்விடத்திலேயே சிகிச்சை கிடைக்க மினி கிளினிக் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர்  உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில்  90 சதவீத பேருக்கு வழங்கப்பட்டு விட்டது. தமிழகம் மின்மிகை மாநிலமாக  திகழ்ந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  பிரசாரத்தின்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள் ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “அவிநாசி-அத்திக்கடவு திட்டம் 1,626 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டம் மூலம் பவானிசாகர் தொகுதியில் மட்டும் 32 குளங்களில் நீர் நிரப்பப்படும்” என்றார்.

Tags : e-tenders ,home ,election campaign ,Chief Minister , Corruption, Chief, Speech
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...