ஊத்துக்கோட்டை பகுதியில் ஐம்பொன் சிலைகளை திருடிய 7 பேர் கைது: கேரளாவில் விற்றது அம்பலம்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயில்களில்  ஜம்பொன் சிலைகளை கொள்ளையடித்து கேரளாவில் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதிக்கு உட்பட்ட போந்தவாக்கம், அன்னதான காக்கவாக்கம், மதுரவாசல் மற்றும் பணப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன், பெருமாள் கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் தாலிபொட்டுகள் தொடர்ந்து அடுத்தடுத்து திருடுபோனது. கோயில்களில் நடந்த கொள்ளை சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி அருகே செவிட்டு பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கவிச்செல்வமணி(21), அம்பேத்கர்(39) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் மேற்கண்ட பகுதியில் கோயில்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பஞ்செட்டியை சேர்ந்த சண்முகராஜ்(20), கும்மிடிப்பூண்டி அருகே ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்(29), செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக்(27), அக்கரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  மேலும்,  திருடிய ஐம்பொன் சிலைகள் மற்றும் நகைகளை கேரள மாநிலம் ஆலப்புழா தாமரைகுளம் பகுதியை சேர்ந்த விஜயன்(42) என்பவரிடம் விற்பனை செய்ததும்  தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று நேற்று முன்தினம் விஜயனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இவர்களிடம் இருந்து அன்னதான காக்கவாக்கத்தில் திருடிய பெருமாள் மற்றும் தேவி ஐம்பொன் சிலைகள், சத்திவேடு கோடூர் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட அம்மன் சிலை மற்றும் 3 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>