- 2026 டி20 உலகக் கோப்பை
- பாக்கிஸ்தான்
- இந்தியா
- இஸ்லாமாபாத்
- பாகிஸ்தான் அரசு
- 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இஸ்லாமாபாத்: 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் விளையாடப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்தத் திடீர் முடிவின்படி, பிப்ரவரி 15, 2026 அன்று இலங்கையில் நடைபெறவிருந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி களம் இறங்காது. வங்கதேச அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், லீக் சுற்றுக்குத் பிந்தைய அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவை எதிர்கொள்ள நேரிட்டால் பாகிஸ்தானின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து பாகிஸ்தான் அரசு இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.
பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் நாளில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்துடன் கொழும்புவில் மோதுகிறது. அதே நாளில் கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகள் – ஸ்காட்லாந்து அணிகளும், மும்பையில் இந்தியா – அமெரிக்கா அணிகளும் தங்களது ஆட்டத்தைத் தொடங்குகின்றன. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, இந்திய நேரப்படி காலை 11 மணிக்கும், இந்திய அணி தனது ஆட்டத்தை இரவு 7 மணிக்கும் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்துடன் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் அணி அந்தப் போட்டிக்கான புள்ளிகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
