×

வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல்: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சலுகைகள் அறிவிக்கப்படுமா?

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில் தொழில் துறையினருக்கு வரி குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள், ஊக்குவிப்பு திட்டங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வர உள்ளதால், அந்த மாநிலங்கள் தொடர்பாக திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். கூட்டத் தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு களை கருத்தில் கொண்டு கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தமடையாத வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும். இதற்கேற்ப உள்கட்டமைப்பு முதலீட்டில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பது அவசியம். உலக அளவிலான போட்டித்தன்மைக்கு ஏற்ப தொழில்துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓட்டல் துறையை பொறுத்தவரை, வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்புட் வரி கிரெடிட் மற்றும் ஜிஎஸ்டி நடைமுறைகளை இதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். இதன்மூலம் ஒட்டு மொத்த அளவில் வரிச்சுமை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறையலாம். இதன் மூலம் அறை வாடகை ரூ.300 முதல் ரூ.700 வரை குறைய வாய்ப்பு உள்ளது என ஓட்டல் துறையினர் சிலர் தெரிவிக்கின்றனர். தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கம் முதலீடு செய்ய வேண்டும் என்று கருதுகிறவர்கள் கூட, விலை உச்சத்தில் உள்ளதாலும், திடீரென விலை இறங்குவதாலும் முதலீடு செய்ய தயங்குகின்றனர். இந்த துறைக்கு உதவுவதற்கு ஏற்ப தங்கம் இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை, வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகைகள் வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, பிரிவு 24(பி)ன் கீழ் வீட்டுக் கடன் வட்டிக்கு தற்போதுள்ள ஆண்டுக்கு ₹2 லட்சம் விலக்கை அதிகரிப்பது மற்றும் பிரிவு 80சி-ன் கீழ் தற்போதுள்ள ரூ1.5 லட்சம் வரம்பிற்கு மேல் வீட்டுவசதி தொடர்பான விலக்கு அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யும் ரியல் எஸ்டேட் துறை மேலும் வலுவாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிய அரசு பட்ஜெட்களில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எனவே, தமிழ்நாட்டில் பின்னலாடை தொழில், மோட்டார் பம்ப் செட் உற்பத்தி தொடர்பான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோல் பதனிடுதலில் தமிழ்நாடு 70 சதவீத பங்களிப்பையும், காலணி உற்பத்தியில் 38 சதவீத பங்களிப்பையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் துறையிலும் முதலிடத்தில் உள்ளது.

எனவே இது சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம். ஏற்கெனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது. இருப்பினும் இதுபோன்ற புதிய திட்டங்கள், சாலை, ரயில் வசதி தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறலாம் என தெரிகிறது. இது போல மற்ற 4 மாநிலங்களுக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒன்றிய பட்ஜெட் பெரும்பாலும் வார நாட்களிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், முந்தைய நாளான 27ம் தேதி சனிக்கிழமையன்று அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Tags : Union Budget ,Tamil Nadu ,New Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Modi ,Tamil Nadu… ,
× RELATED 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்...