×

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி ஆஸி. சாம்பியன் பட்டத்தை வென்றார் ரைபகினா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரைபாகினா அபார வெற்றி பெற்றார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அரீனா சபலென்காவை எதிர்கொண்ட ரைபாகினா, தனது அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைத் தனது வசமாக்கினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபாகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என ரைபாகினா கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டில் சபலென்கா 6-4 எனத் திருப்பித் தாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், சபலென்கா ஆரம்பத்தில் 3-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றார். இருப்பினும், மனம் தளராமல் விளையாடிய ரைபாகினா, அதிரடியாகப் புள்ளிகளைக் குவித்து 6-4 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் எலினா ரைபாகினா தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்த அவருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ஏற்கனவே 2022-ல் விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்த ரைபாகினாவுக்கு இது மற்றுமொரு மகுடமாக அமைந்தது. அதே சமயம், கடந்த இரண்டு ஆண்டுகளில் சாம்பியனாகத் திகழ்ந்த சபலென்கா, மூன்றாவது முறையாகப் பட்டம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

Tags : Aussie ,Sabalenka ,Rybakina ,Melbourne ,Australian Open Women's Singles Division Final ,Rod Laver Arena ,Melbourne, Australia ,Elina Rybaghina ,Kazakhstan ,Rybagina ,Arena Sabalenka ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலையொட்டி...