சென்னை: எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடியை வரவேற்று வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் படுகாயமடைந்தார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்கும் வகையில் அந்த பகுதியில் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.ரவி சார்பில் சாலை முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று, மார்க்கெட்டுக்கு வந்திருந்த பெண் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரணி நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்தார். அவரை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேனர் வைத்தனர். அப்போது அந்த பேனர் காற்றில் கிழிந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற தந்தை, மகன் மீது விழுந்துள்ளது. இதில் இருவரும், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேம்பாலத்திலிருந்து பேனர் கிழிந்து சாலையில் விழுந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பேசுப் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.
* கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய மாற்றுத்திறனாளிகள் கடன்கள் தள்ளுபடி அதிமுக தேர்தல் வாக்குறுதி
அதிமுக தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், அண்ணா பிரதான சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ‘‘அதிமுக முதல்கட்ட தேர்தல் அறிக்கையில் அற்புதமான அறிவிப்புகள், இன்னும் பல சலுகைகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி கொடுக்கப்படும். இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. கழகத்தின் சார்பில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணியில் போட்டியிட்டால் அக்கட்சி சின்னத்துக்கும் வாக்களியுங்கள். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்றார்.
