×

அரியானாவில் ரூ.10 கோடி நகை கொள்ளை சேலத்தில் பதுங்கிய பவாரியா கும்பல் கைது

சேலம்: அரியானா மாநிலத்தில் உள்ள நகைக்கடையில் ரூ.10 கோடி நகையை கொள்ளையடித்துவிட்டு சேலத்தில் பதுங்கிய பவாரியா கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் பிணங்குவான் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடைக்குள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கொள்ளையர்கள் புகுந்து ரூ.10 கோடி மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இதுபற்றி பிணங்குவான் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், ராஜஸ்தான், உத்திரபிரதேசத்தை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல், இச்சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். நகையை கொள்ளையடித்ததும், அங்கிருந்து தப்பிய பவாரியா கொள்ளையர்கள், வெவ்வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்வது போல் சென்று பதுங்கியதை போலீசார் உறுதி செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட அரியானா தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த பவாரியா கொள்ளையர்கள் 2 பேர், சேலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அதுகுறித்த தகவலை சேலம் மாவட்ட எஸ்பி கௌதம்கோயலுக்கு அரியானா போலீசார் தெரிவித்தனர். இதன்பேரில் அந்த 2 பவாரியா கொள்ளையர்களையும் கண்காணித்து பிடிக்க ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படை போலீசார், அக்கொள்ளையர்கள் படத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து மரவேலை (வீடுகளுக்கு கபோடு செய்து கொடுத்தல்) செய்து வந்தது தெரிந்தது.

3 நாட்களுக்கு முன், 2 பேரும் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, சேலம் மற்றும் அரியானா தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், உத்திரபிரதேச மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த ஆர்யாசிங் (எ) பரத் (31), ராஜன்பாபு (28) எனத்தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், உடனடியாக அரியானாவிற்கு கொண்டு சென்றனர். நகையை எங்கு பதுக்கி வைத்துள்ளார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களது கூட்டாளிகள் சிலர், கேரளா, கர்நாடகாவில் பதுங்கியிருந்து கட்டுமான வேலையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் முகாமிட்டு, அவர்களை பிடிக்க அரியானா தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானாவில் ரூ.10 கோடி நகையை கொள்ளையடித்துவிட்டு சேலத்தில் பதுங்கிய பவாரியா கொள்ளையர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Haryana ,Salem ,Pinangwan ,Nuh district ,
× RELATED சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பு...