×

சாக்கு மூட்டையில் பீகார் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை: கடந்த 26ம் தேதி அடையாறில் சாலையோரமாக சாக்குமூட்டையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக பிடிபட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை அடையார் இந்திரா நகர் 1வது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26ம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது சுமார் 35 வயதுடைய வடமாநில இளைஞரின் தலை, முகத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து வாலிபரை கொலை செய்து சாக்குமூட்டையில் வீசி சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மேலும் இறந்தவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் எனவும், கடந்த 22ம் தேதி பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பவர் தனது மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதாகவும், தற்போது வேலை காலி இல்லாததால், தேவைப்படும் போது, அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தாகவும், தற்போது அவர் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் என தெரியவந்தது.

கவுரவ் குமார் நெருங்கிய நண்பர் உள்பட 7 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குமூலம் குறித்து தனிப்படை போலீசார் மனைவி மற்றும் குழந்தையின் சடலத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுட்டனர். அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றுயோரம், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளிலும் அடையாறு முகத்துவாரம் பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இரண்டு வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மனைவியின் உடலை தொடர்ந்து காவல்துறை தேடி வருகின்றனர்.

Tags : Bihar ,Chennai ,Independent Police ,Idiyar ,
× RELATED காசிமேடு பகுதியில் குழந்தை விற்பனை...