×

காசிமேடு பகுதியில் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் 4 பேர் கைது: கைதானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு, பவர்குப்பம், 2வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (23). இவரது கணவர் சகாயராஜ் (25). இத்தம்பதிக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து மீண்டும் கர்ப்பமான திலகவதிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண்குழந்தை பிறந்துள்ளது. குடும்ப கஷ்டத்தினால், தனக்குப் பிறந்த ஆண்குழந்தையை விற்பனை செய்ய திலகவதி முடிவு செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்ததும் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரதீபா (32), காசிமேடு வெண்ணிலா (45), புதுவண்ணாரப்பேட்டை கௌசல்யா (40) ஆகிய 3 பெண்களும் விற்பனை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்படி, திலவகதியின் ஆண்குழந்தை ரூ.3.80 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முரளிக்கு புகார் வந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் காசிமேடு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி, அவரது கணவர் சகாயராஜ் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பிரதீபா (32), வெண்ணிலா (45), கௌசல்யா (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சேலத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலுக்கு பிரதீபா, வெண்ணிலா, கௌசல்யா ஆகிய 3 பெண்களும் சென்றுள்ளனர். அப்போது ஈரோட்டை சேர்ந்த கவிதா (44), சேலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (33) ஆகிய 2 பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நட்பின்பேரில், ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ள விரும்புவதாக சென்னையை சேர்ந்த 3 பெண்களிடமும் கவிதா கூறியுள்ளார். இதையடுத்து கவிதாவிடம் பேரம் பேசி, திலகவதியின் ஆண்குழந்தையை ரூ.3.80 லட்சத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி, கடந்த மாதம் சென்னைக்கு கவிதா வந்து, பிரதீபா உள்பட 3 பெண்களிடம் ரூ.3.80 லட்சத்தை கொடுத்து, திலகவதியின் ஆண்குழந்தையை வாங்கி சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அப்பணத்தில் திலகவதிக்கு ரூ.3 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் பிரதீபா ரூ.20 ஆயிரம், வெண்ணிலா ரூ.30 ஆயிரம், கவுசல்யா ரூ.30 ஆயிரம் எனப் பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோட்டுக்கு தனிப்படை போலீசார் சென்று, அங்கு கவிதாவை பிடித்து விசாரித்தபோது, மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன்படி, சென்னை காசிமேட்டை சேர்ந்த திலகவதியின் ஆண்குழந்தையை கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தை சேர்ந்த ராமன் (52), விஏஓவான அவரது மனைவி மாதம்மாள் (50) ஆகிய தம்பதிக்கு ஈரோடு கவிதா, சேலம் ஜெயலட்சுமி விற்பனை செய்துள்ளனர் என்ற கூடுதல் விவரங்களும் தெரியவந்தது. இதையடுத்து திலகவதியின் குழந்தையை விற்பனை செய்த ஈரோடு கவிதா, சேலம் ஜெயலட்சுமி, அக்குழந்தையை வாங்கிய ராமன், மாதம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்து சென்னை காசிமேடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வாங்கிய ராமன், அவரது மனைவி மாதம்மாள், ஈரோடு கவிதா, சேலம் ஜெயலட்சுமி, சென்னையில் குழந்தையை விற்பனை செய்த திலகவதி, அவரது கணவர் சகாயராஜ், குழந்தை விற்பனையில் உடந்தையாக இருந்த பிரதிபா, வெண்ணிலா, கௌசல்யா ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.

மேலும், விற்பனை செய்யப்பட்ட ஆண்குழந்தை மீட்கப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்தனர். பின்னர் கைதான 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தை விற்பனை சம்பந்தமான வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவ காசிமேடு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Ghazimedu ,Thandiyarpettai ,Thilagawati ,Chennai Kasimedu, ,Powargupam ,Block ,Sakhayraj ,Tilakawati ,
× RELATED வேடச்சந்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவர் கைது!!