மும்பை : மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமான விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய அரசியலில் பல்வேறு பரபரப்புகளை உருவாக்கி துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து பிளவை ஏற்படுத்தி தனியாக இயங்கினார் அஜித் பவார்.1982ல் தீவிர அரசியலில் நுழைந்த அஜித் பவார் புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக 1991ல் தேர்வானார். தொடர்ந்து 16 ஆண்டுகள் கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் நீடித்தார். மராட்டிய சட்டமன்றத்துக்கு பாராமதி தொகுதியில் இருந்து 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜித் பவார். மராட்டிய துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் அஜித் பவார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சரத் பவார் கட்சியுடன் இணைய அஜித் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தார்.
