- குடமுழு
- தான்தோன்றிமலை கோயில்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- தாந்தன்ரிமலை
- கல்யாண வெங்கட்ரணா ஸ்வாமி கோயில்
- கரூர்
- தமிழ்
- ராஜேந்திரன்
- கல்யாண
- தான்தோன்றிமலை…
மதுரை: தான்தோன்றிமலை கல்யாண வெங்கட் ரமண சுவாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் தான்தோன்றிமலையில் புகழ்பெற்ற கல்யாண வெங்கட் ரமண சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது. குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களை ஓதுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி, ‘‘ஓதுவார்கள் யாகசாலைக்கு வெளியே பாசுரம் பாடுகிறார்கள். இதுவும் ஒரு வகை தீண்டாமை தான். எனவே, ஏற்கனவே உயர்நீதிமன்றம் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் குடமுழக்கு விழா நடைபெற வேண்டும்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘கோயில் குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறது. ஆழ்வார் பாசுரங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம் உள்ளிட்டவை ஓதப்படுகிறது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ஏற்ப கரூர் தான்தோன்றிமலை வெங்கட் ரமண சுவாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும். தமிழ் ஓதுவார்களை குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது. யாக குண்டத்துக்கு அருகே தான் உட்கார வைக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று குடமுழுக்கு முடிந்த பிறகு நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
