- யூஜிசி
- ஐரோப்பிய ஒன்றிய
- புது தில்லி
- பல்கலைக்கழக மானியக் குழு
- உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்
புதுடெல்லி: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பாகுபாடு புகார்களைக் கருத்தில் கொண்டு சமத்துவத்தை ஊக்குவிக்க சமத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் ஜனவரி 13 அன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள், 2026, இந்தக் குழுக்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (ஓபிசிக்கள்), பட்டியல் சாதிகள் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி), மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்த புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்திய பரேலி துணைகலெக்டர் அலங்கர் அக்னிஹோத்ரியை உத்தரப் பிரதேச அரசு இடைநீக்கம் செய்தது. இருப்பினும் பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் குழுவினர் போராட்டம் நடத்தினர்.
பல மாநிலங்களில் இந்த விதிமுறைகள் குறித்து மாணவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், யுஜிசி அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகள் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது, விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்தார். இதற்கிடையில், இடதுசாரி மாணவர் குழுவான அகில இந்திய மாணவர் சங்கம், யுஜிசியின் சமபங்கு விதிமுறைகள், 2026 ஐ ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. சமபங்கு பாதுகாப்பு வரம்பிற்குள் ஓபிசி சேர்க்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று அது கூறியது. உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான துன்புறுத்தலுக்கு ஆளான ரோஹித் வெமுலா மற்றும் பயல் தத்வியின் ஆகியோரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிய விதிமுறைகளை சமர்ப்பிக்கச் சொன்னதைத் தொடர்ந்து யுஜிசி புதிய விதிகளை வெளியிடப்பட்டது.
* உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதிய யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
* புதிய விதிமுறைகள் என்ன சொல்கிறது?
1. மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி அல்லது இயலாமை, குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள், மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களில் எவருக்கும் எதிரான பாகுபாட்டை ஒழிப்பதையும், உயர்கல்வி நிறுவனங்களில் முழு சமத்துவத்தை ஊக்குவிப்பது முக்கியம்.
2. பாகுபாடு என்பது எந்தவொரு மாணவருக்கும் எதிராக, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம், இயலாமை அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடக்கும் செயலாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்குமுறையின்படி, உயர்கல்வி நிறுவனங்கள் எந்த வகையான பாகுபாட்டையும் அனுமதிக்கவோ அல்லது மன்னிக்கவோ கூடாது.
3. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பின்தங்கிய குழுக்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும், கல்வி, நிதி, சமூக மற்றும் பிற விஷயங்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும், வளாகத்திற்குள் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் ஒரு சம வாய்ப்பு குழு நிறுவ வேண்டும். இதில் ஓபிசிக்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
4. உயர்கல்வி நிறுவனத்தின் பணிகளில் அனைத்து சமூகத்தினருக்கு சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்தல் மற்றும் சமூக உள்ளடக்கத்தை ஏற்படுத்துதல் வேண்டும். மாணவர்கள், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களிடையே சமத்துவத்தை ஊக்குவித்தல் வேண்டும்.
5. எந்தவொரு பாகுபாடு சம்பவத்தையும் புகாரளிக்க மையம் ஒரு ஆன்லைன் போர்ட்டலைப் பராமரிக்க வேண்டும். மேலும் ‘ஈக்விட்டி ஹெல்ப்லைன்’ இயக்கப்படும்.
6. புதிய விதிமுறைகளுக்கு இணங்காத உயர்கல்வி நிறுவனங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இணங்காதது கண்டறியப்பட்டால், அவர்கள் யுஜிசி திட்டங்களில் பங்கேற்பதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.
