புதுடெல்லி: எக்ஸ், யூடியூப்பை தொடர்ந்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவும் பிரீமியம் கட்டணங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டிவிட்டர் தளம் தற்போதைய எக்ஸ் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் வாங்கிய பிறகு கட்டணம் முறையை அமல்படுத்தினார். தற்போது எக்ஸ் பயன்படுத்த இலவசமாகவும், மாதம் ரூ.170க்கு அடிப்படை எக்ஸ் தளமும், ரூ.427க்கு பிரீமியம் தளமும், 2570க்கு பிரீமியம் பிளஸ் தளமும் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் யூடியூப்பும் கட்டண தளத்திலும் செயல்படுகிறது.
அந்த வரியைில் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா கட்டண சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. மெட்டா தளத்தில் இயங்கும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு இனிமேல் பிரீமியம் கட்டணம் விரைவில் விதிக்கப்பட உள்ளது. அப்போது ஏஐ வசதிகளும் அதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பில் கடந்த டிசம்பரில் சீனாவிடம் இருந்து வாங்கிய ஏஐ மனுசை இதில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏஐ மனுஸ் சந்தா திட்டங்களை ஒவ்வொருவரின் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் கட்டணம் விதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக கணக்குகளுக்கு தனி கட்டணம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மாதாந்திர கட்டணத்திற்கு நீல நிற டிக் வழங்கும் கட்டண சரிபார்ப்பு சேவையை மெட்டா வெளியிடத் தொடங்கியது. அதை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் உள்ள அதன் பயனர்களுக்கு முக்கிய பயன்பாடுகளை விருப்ப கட்டண அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. சந்தா சோதனைகள் வரும் மாதங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடங்கும் என்பதை மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் தளத்தின் முக்கிய செயல்பாடுகள் இலவசமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
