×

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து இஸ்லாமிய இயக்கத்தினர் பேரணி தஞ்சையில் பிப். 20 ல் நடத்த முடிவு

தஞ்சை, ஜன .29: அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் பிப். 20ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் தலைமையில் நடைபெற்றது.
டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களுக்கு மேலாக கடும் குளிரிலும் குடும்பத்துடன் போராடி வருகிறார்கள். ஜனவரி 26ம் தேதி நடந்த பேரணியில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டதும், வன்முறை நிகழ்ச்சிகள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகின்ற வகையில் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மாநில அரசு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு வேளாண் சட்டம் திரும்பப் பெறுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும். அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 20ம் தேதி தஞ்சையில் மிகப்பெரிய பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது மக்கள் பிரதிநிதிகள் அனைத்துக்கட்சி அனைத்து இயக்க தலைவர்கள் பங்கேற்க செய்வது, கோரிக்கைகளை விளக்கி தஞ்சை மாநகர் முழுவதும் தெருமுனை பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பாதுஷா, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் சேக்தாவூத். தவ்ஹீத் ஜமாஅத் மாநகர செயலாளர் யாசர் அராபத், மனிதநேய ஜனநாயக கட்சி மாநகர செயலாளர் அப்துல்லா, வார்டு செயலாளர் முகமது காமில் எஸ்டிபிஐ சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜாஹிர் உசேன், பள்ளிவாசல் பணியாளர் சங்க சட்ட ஆலோசகர் சந்திரகுமார், அனைத்து கட்சி அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : movements ,Tanjore ,Delhi ,
× RELATED தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து...