- மருத்துவமனையில்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- கிண்டி, சென்னை
- டாக்டர்
- எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2026) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
2024-25ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்குவதற்காக சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ஆராய்ச்சி மற்றும் தரமான மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தனக்குச் சொந்தமான உறுப்புக் கல்லூரி அல்லது மருத்துவமனை எதுவும் இல்லாததால், இம்மருத்துவமனையை நிறுவிட முன்வந்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் 4,63,544 சதுர அடி பரப்பளவில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், 750 படுக்கைகள் கொண்ட இந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதன் மூலம், உயர்தர சிறப்புப் பிரிவு குழந்தை மருத்துவப் பராமரிப்புக்காக ஒரு தனித்துவமான வசதி உருவாக்கப்படும்.
இது நோயுற்ற குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவு, குழந்தை மருத்துவப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், குழந்தை மருத்துவக் கல்விக்கு ஆதரவளிக்கவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மேலும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை எளிதாக்கவும் உதவும். இது குழந்தை மருத்துவ சிறப்புப் பிரிவு சேவைகளில் ஒரு அதிசிறப்பு மையமாக (Centre of Excellence) செயல்படும்.
இச்சிறப்பு மருத்துவமனையின் தரைத்தளத்தில், அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, முதல் தளத்தில் குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, டயாலிஸிஸ் வார்டு, இயக்குநர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் பிரிவு, இரத்தவியல் பிரிவு, சிறப்பு வார்டுகள், மூன்றாம் தளத்தில் இரைப்பை குடல் சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு;
சிறப்பு வார்டுகள், தனி அறைகள், நான்காம் தளத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம், சிறப்பு வார்டுகள், ஐந்தாம் தளத்தில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, நிர்வாக அலுவலகம், இரத்த வங்கி, கருத்தரங்கக்கூடம், மைய ஆய்வகம், மயக்க மருந்தியல் பிரிவு, ஆறாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள், கேத் ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

