×

அச்சத்துடன் பணிக்கு செல்லும் வேளாண் துறை ஊழியர்கள் சேரன்மகாதேவியில் பராமரிப்பின்றி பாழான கோயில் தெப்பக்குளம்: மீண்டும் கழிப்பிடமாக மாறிய வழிப்பாதை

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் அப்போதைய சப் கலெக்டர் (தற்போதைய கலெக்டர்)  விஷ்ணுவால் புத்துயிர் பெற்ற கோயில் தெப்பக்குளமும், வழிப்பாதையும் முறையான பராமரிப்பின்றி சுகாதார  சீர்கேட்டுடன் காட்சியளிக்கின்றன.நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி  பஸ்நிலையம் பின்புறம் கன்னடியன் கால்வாய்க் கரையில் பிரசித்தி பெற்ற  மிளகு பிள்ளையார் கோயில், வைத்தியநாத சுவாமி கோயில்களுக்கு சொந்தமான  தெப்பக்குளம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேரன்மகாதேவி  மக்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்ந்த இக்குளம், பின்னர் முறையான  பராமரிப்பின்றியும், அதிகாரிகளின் அலட்சியப்போக்காலும் சமூகவிரோதிகளின்  கூடாராமாக மாறியது. அத்துடன் குளத்தை ஆகாயத் தாமரை, அமலைச்செடிகள், சீமை கருவேல  மரங்களும் ஆக்கிரமித்தன. கடந்த 2016ல் சேரன்மகாதேவி சப்  கலெக்டராக பொறுப்பேற்ற தற்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, குளத்தை  தூர்வாரி சீரமைத்து பூங்கா அமைக்க முடிவு செய்தார். அதன்படி அதே ஆண்டு ஜூன்  மாதம் அவரது தலைமையில் ஆழ்வார்குறிச்சி பரமக்கல்யாணி கல்லூரி என்எஸ்எஸ்  மாணவர்கள்,  அனைத்து அரசுத்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும்  குளத்தை முழுமையாகத் தூர் வாரினர். அத்துடன் டவுன் மெயின்ரோட்டில்  கன்னடியன் கால்வாய் பாலத்தில் இருந்து மிளகு பிள்ளையார் கோயில் வரை  வழிப்பாதையில் காணப்பட்ட சுகாதார சீர்கேடுகளை முற்றிலும் அகற்றி  தூய்மைபடுத்தினர். மேலும் வழிப்பாதையை கண்காணிக்க தற்காலிக காவலரை  பணியமர்த்தியதால் அவ்விடத்தில் மக்கள் இயற்கை உபாதை கழிப்பது அடியோடு  நின்று போனது. இதன் தொடர்ச்சியாக குளக்கரையில் ஆங்கிலேயர் காலத்தில்  கட்டப்பட்ட சப் கலெக்டர் பங்களாவை சுற்றிலும் புதிய மரக்கன்றுகள் நட்டிய  விஷ்ணு அதை முறையாக பராமரிக்கவும் ஏற்பாடு செய்தார். அத்துடன் அங்கு  பேரூராட்சி மூலம் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்ட நிலையில் 2017ம் ஆண்டு  மே மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பிறகு அப்பகுதியில்  பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்பகுதியில் ரூ.பல லட்சம் மதிப்பில்  கட்டப்பட்ட வேளாண் பொறியயில் விரிவாக்க மையம் பயன்பாட்டில்  இருந்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் ஒத்துழைக்க மறந்ததாலும், அதிகாரிகளின்  பாராமுகத்தாலும் அப்பகுதியில் உள்ள வழிப்பாதை இயற்கை உபாதை கழிக்கும்  இடமாக மீண்டும் மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் குறைந்ததோடு  குளமும் பாழானது. இதில் உள்ள தண்ணீரும் பச்சைப் பசேல் என மாசுபட்டுள்ளது.மேலும் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களும்  சுகாதார சீர்கேடாக மாறியுள்ள இப்பாதையைத் தான் பயன்படுத்த வேண்டிய அவலம்  தொடர்கிறது. எனவே, இதுவிஷயத்தில் அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள்  உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இவ்வழிப்பாதையை மீண்டும் சீரமைத்து  பயன்பாட்டிற்கு கொண்டுவர முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே சமூக  ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.நிரந்தரத்தீர்வுசேரன்மகாதேவி மிளகு பிள்ளையார் கோயில் மற்றும் வழிப்பாதையில் அசுத்தம்  செய்பவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் அபராதம் விதிப்பதோடு,  அவ்விடத்தில் கூடுதல் விளக்குகள் அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.  மேலும் வைத்தியநாதசுவாமி கோயில் வழியாக வரும் போது கன்னடியன் கால்வாயில் பல  ஆண்டுகளாக உடைந்து கிடக்கும் பாலத்தை சீரமைத்து இருவழிகளிலும் வாகனங்கள்  வந்து செல்ல வழிவகை செய்யவேண்டும். பேரூராட்சி நிர்வாகம் மூலம்  இவ்வழித்தடத்தில் பொது சுகாதாரவளாகம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

The post அச்சத்துடன் பணிக்கு செல்லும் வேளாண் துறை ஊழியர்கள் சேரன்மகாதேவியில் பராமரிப்பின்றி பாழான கோயில் தெப்பக்குளம்: மீண்டும் கழிப்பிடமாக மாறிய வழிப்பாதை appeared first on Dinakaran.

Tags : Cheranmakhadevi Theppakulam ,Theppakulam ,Vishnu ,Cheranmahadevi ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...