வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் கனடா இடையே நீண்ட காலமாக வர்த்தக மற்றும் ராணுவ ரீதியிலான நல்லுறவு இருந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் ‘கோல்டன் டோம்’ எனப்படும் பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு கவச திட்டத்தை கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் செயல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்கு கிரீன்லாந்து பகுதியை பயன்படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த மெகா பாதுகாப்பு திட்டத்தை கனடா அரசு தற்போது நிராகரித்துள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் கனடாவை கடுமையாக சாடியுள்ளார்.
‘அமெரிக்கா வழங்கும் இலவச பாதுகாப்பிற்கு கனடா நன்றி இல்லாமல் இருக்கிறது. அமெரிக்கா இருப்பதால்தான் கனடா நாடே உயிர்ப்புடன் இருக்கிறது’ என்று அவர் காரசாரமாக குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டதை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘சீனாவுடன் கனடா தற்போது காட்டும் நெருக்கம் மிகவும் ஆபத்தானது. இன்னும் ஒரு ஆண்டிற்குள் கனடாவை சீனா கபளீகரம் செய்துவிடும்’ என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். கனடா மற்றும் சீனா இடையே கடந்த 17ம் தேதி 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 100 சதவீத வரியை குறைக்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக, கனடாவின் கனோலா விதைகளுக்கு விதித்திருந்த 84 சதவீத வரியை சுமார் 15 சதவீதமாக குறைக்க சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தக மாற்றம் அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா தூதர் பாப் ரே, ‘பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்கா மிரட்டி பணம் பறிக்கப் பார்க்கிறது’ என்று குற்றம்சாட்டினார். மேலும் கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘அமெரிக்காவால் கனடா வாழவில்லை. நாங்கள் கனடா மக்களாக இருப்பதால்தான் கனடா செழிப்பாக உள்ளது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரம் மற்றும் சீன வர்த்தகப் போரால் இரு நாடுகளிடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
