×

கைதான 7 பேரை பெங்களூரு அழைத்துச்சென்று விசாரணை

ஓசூர், ஜன.29: ஓசூரில் நிதி நிறுவனத்தில் ₹12 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேரை, பெங்களூருவுக்கு போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 22ம் தேதி, வட மாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த ₹12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூப்சிங் பாகல், சங்கர்சிங் பாகல், பவன்குமார் விஸ்கர்மா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த பபேந்தர் மஞ்சி, விவேக்மண்டல், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் டேக்ராம், ராஜீவ்குமார் ஆகிய 7 பேரை தெலங்கானா மாநிலத்தில் 23ம் தேதி போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், கார் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, ஓசூர் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டடனர். போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு முதல் விடிய, விடிய கொள்ளையர்களிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து 7 பேரையும், நேற்று காலை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தங்கிய இடம், கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய இடங்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர், நேற்று மாலை 7 பேரும் ஓசூர் கொண்டு வரப்பட்டனர். வரும் நாட்களில் தனியார் நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : persons ,Bangalore ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...