×

7 திரைகளை நீக்கி ேஜாதி தரிசனம் சன்மார்க்க கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு

நெய்வேலி, ஜன. 29: வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 150வது தைப்பூச திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு கருப்பு திரை, நீலத் திரை, பச்சை திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரை ஆகிய ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
 
அப்போது ஜோதி தரிசனத்தை கண்ட பக்தர்கள் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  உச்சரித்து கொண்டே ஜோதி தரிசனம் கண்டு மகிழ்ந்தனர். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று (29ம் தேதி) அதிகாலை 5.30 மணியளவில் ஜோதி தரிசனம் நடந்தது.இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் பக்தர்கள் முகக்கவசம், வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தனிமனித இடைவெளிவிட்டு வரிசையில் அனுப்பப்பட்டனர். மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாத அளவுக்கு ஜோதி தரிசனம் காண்பதற்காக வெளியில் பெரிய திரைகள் மூலம் ஜோதி தரிசனம் காண்பித்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடலூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

மேலும் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்தாண்டு கொரோனா பரவலால் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வடலூரில் விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்  அபிநவ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Devotees ,Ejadi Darshan Sanmarkka ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்