×

மேயர் இல்லாதபோது பொறுப்பு மேயராக துணைமேயர் செயல்படலாம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை:மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி மேயர் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை அமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல் உள்ளன.

இதுதொடர்பாக கேட்டபோது மாமன்ற கூட்டம் நடைபெறாததால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மக்களுக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது ஏற்கத்தக்கது அல்ல. புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைமேயர், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மேயர் இல்லாதபோது, துணை மேயர் பொறுப்பு மேயராக செயல்படலாம் என விதிகள் தெரிவிக்கின்றன.

கூட்டம் முறையாக நடத்தப்படாததால் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல’’ என்றனர். பின்னர் மனுவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Tags : Madurai ,Manikandan ,High Court ,Madurai Corporation ,
× RELATED 125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல;...